Published : 25 Feb 2018 10:04 AM
Last Updated : 25 Feb 2018 10:04 AM

அரசு சேவைகளுக்கான கட்டணத்தை ஒரே ஸ்மார்ட் கார்டில் செலுத்தும் வசதி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை

அரசின் பல்வேறு சேவைகளுக் கான கட்டணத்தை ஒரே ஸ்மார்ட் கார்டைக் கொண்டு செலுத்தும் வசதியை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்த உள்ளது.

சிங்கப்பூரில் ஒரே ஸ்மார்ட் கார்டைக் கொண்டு ரயில் டிக் கெட் கட்டணம், பஸ் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்தலாம். அந்த கார்டைக் கொண்டே கடைகளில் பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். இது சிங்கப்பூர் மக்களிடமும், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டம் சிங்கப்பூரில் சுமார் 20 ஆண்டுகளாக அமலில் உள்ளது.

அதேபோன்று சென்னையிலும் பணமில்லா பரிவர்த்தனை முறை யில் பல்வேறு அரசு சேவைகளுக்கான கட்டணங்களை ஒரே ஸ்மார்ட் கார்டு மூலமாகச் செலுத்தும் வசதியை செயல்படுத்த நகராட்சி நிர்வாகத் துறை திட்டமிட்டிருந்தது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை மாநகரில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாநகரப் பேருந்து போக்குவரத்து கட்டணம், மின் கட்டணம், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம், சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை சிரமமின்றி விரைவாகச் செலுத்தும் வகையில் பொதுமக்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்துவதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதற்கான டெண்டரும் கோரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஸ்மார்ட் கார்ட் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்பட உள்ளது. ஸ்மார்ட் கார்டுகளையும், அதைப் பயன்படுத்தும் கருவிகளையும் வங்கிகள்தான் வழங்கும். அந்த ஸ்மார்ட் கார்டை விருப்பமுள்ள பொதுமக்கள் வாங்கி, ரீசார்ஜ் முறையில் பணத்தை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். அதைக் கொண்டு மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்துக்கான வரியைச் செலுத்தலாம். தற்போது ஆவினில் நாம் பணத்தை கொடுத்துத்தான் பொருட்களை வாங்க வேண்டும். இந்த ஸ்மார்ட் கார்டு இருந்தால், அதைக் கொண்டு பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதற்கான கருவிகளை ஆவின் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் வழங்கும்.

பணத்தை பெறும் கருவிகள்

இதேபோன்று மக்களுக்கு சேவை வழங்கும் பல்வேறு அரசுத் துறைகளுக்கு ஸ்மார்ட் கார்டிலிருந்து பணத்தைப் பெறும் கருவிகள் வழங்கப்படும். அதைக் கொண்டு மாநகர பஸ் கட்டணத்தையும் செலுத்தலாம். அந்த ஸ்மார்ட் கார்டைக் கொண்டே மெட்ரோ ரயில் கட்டணத்தை செலுத்தும் வசதி, தனியார் கடைகளில் பொருட்களை வாங்கும் வசதிகளையும் கொண்டு வருவது பற்றி பரிசீலித்து வருகிறோம். சென்னை மாநகராட்சி சார்பில் விரைவில் கொண்டுவர உள்ள சைக்கிள் ஷேரிங் திட்டத்தில் கூட இந்த ஸ்மார்ட் கார்டுகளைப் பயன்படுத்தலாம். வாகன நிறுத்த கட்டணத்தைக் கூட செலுத்தலாம். இதுதொடர்பாக பல்வேறு வங்கிகளிடம் பேசி வருகிறோம். விரைவில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x