Published : 27 Mar 2024 06:00 AM
Last Updated : 27 Mar 2024 06:00 AM

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு எடுத்து செல்லப்பட்டன: மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டை, ஜெயின் கோயில் பகுதியில் உள்ள வைப்பு அறையில் இருந்து, சட்ட மன்றத் தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பிவைக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் , நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். | படம்: ம.பிரபு |

சென்னை: அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மக்களவை தேர்தலையொட்டி, சென்னை மாவட்டத்தில் குலுக்கல் முறையில் 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

அந்த வகையில் 4,469 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4,469 கட்டுப்பாட்டுக் கருவிகள், 4,842 வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை கருவிகள் ஆகியவை சிந்தாதிரிப்பேட்டை ஜெயின் கோயில் பகுதியில் உள்ளவைப்பு அறையிலிருந்து, 16 சட்டப்பேரவை தொகுதிகளின் வைப்புஅறைகளுக்கு கேமரா கண்காணிப்பு மற்றும் காவல்துறை உதவியுடன் கொண்டு செல்லப்பட்டன.

இந்தப் பணிகளை சென்னைமாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மக்களவை தேர்தல் ஒளிவுமறைவு இன்றிநடைபெறும் வகையில் அரசியல்கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொகுதிகளில் 24 மணி நேர கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பறக்கும் படைமற்றும் கண்காணிப்புக் குழுக்களின் மூலமாக இதுவரை ரூ.2.35 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல ரூ.5.32 கோடி மதிப்புள்ள 8,046 கிராம் தங்கம், ரூ.15 லட்சம் மதிப்பிலான 12 ஐபோன்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் மொத்தமாக ரூ.7.83 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதலாகி உள்ளன.

மாவட்ட தேர்தல் அதிகாரியின்பொறுப்பு என்பது வாக்குச்சாவடிகளை தயார் செய்வது, தேர்தல் இயந்திரங்களைத் தயார்நிலையில் வைத்திருப்பது உள்ளிட்டவைதான். வேட்புமனுக்கள் தொடர்பானவை தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் வரம்புக்கு உட்பட்டது. வடசென்னையில் நடைபெற்ற பிரச்சினையை நானும் அறிவேன்.

பொதுவாகவே டோக்கன் அடிப்படையில் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல 4 அல்லது 5 நபர்களுக்கு மேல்அனுமதித்திருக்கவும் கூடாது. இந்த சம்பவம் குறித்து தேர்தல்நடத்தும் அதிகாரி விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பார்.

இதுவரை வட சென்னையில் 23 வேட்பாளர்களும், தென் சென்னையில் 20 வேட்பாளர்களும், மத்திய சென்னையில் 9 வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் மொத்தமாக 52 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இதுதவிர தேர்தலுக்காக 6 மத்திய தேர்தல் செலவின பார்வையாளர்கள் சென்னை வர உள்ளனர். 579 வாக்குச்சாவடிகள் பதற்றமுள்ள வாக்குச்சாவடிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளன என்றார்.இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x