Published : 27 Mar 2024 12:32 AM
Last Updated : 27 Mar 2024 12:32 AM
கரூர்: முழு பொய்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு தேர்தல் அறிக்கை என்கின்றனர் என திமுக தேர்தல் அறிக்கை குறித்து அண்ணாமலை தெரிவித்தார்.
கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கரூர் மக்களவைத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (மார்ச் 26) நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவரும், கரூர் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான வி.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பங்கேற்று வேட்பாளர் செந்தில்நாதனை அறிமுகம் செய்து வைத்து பேசியது:
கரூர் மக்களவை தேர்தலில் 2 விஷயங்களை முன்னிறுத்துகிறேன். பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை வெற்றி பெற செய்து மக்கள் பாஜகவு டன் சேர்ந்து வளர்ச்சி அரசியலுக்கு குரல் கொடுக்க வேண்டும். மக்கள் சேவை செய்யாத செயல்படாத எம்.பியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
கரூரில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. விவசாயம், தொழிற்சாலைகளை நம்பி மக்களின் வாழ்வாதாரம் உள்ளது. வறட்சி பகுதியாக என்பதால் மக்கள் ஆடு, மாடு என கால்நடை வளர்ப்பை நம்பியுள்ளனர். வேலைவாய்ப்புக்காக மக்கள் எங்கெங்கோ செல்கின்றனர். ஒரு எம்.பி உள்ளூரிலே இருந்து ஒழுங்காக பணி செய்தால் வறுமைக்கோட்டிற்கு கீழ் 1 சதவீதம் பேர் இருக்கமாட்டார்கள். அவர்கள் வேலை தந்து வறுமையை ஒழிக்க வேண்டும்.
தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது. பெரம்பலூர் மக்களவை வேட்பாளராக அமைச்சர் நேரு மகன் போட்டியிடுகிறார். துரைமுருகன் மகன், தென் சென்னையில் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி, மத்திய சென்னையில் தயாநிதி மாறன், வடசென்னையில் ஆற்காடு வீராசாமி மகன் போட்டியிடுகிறார்.
எதையும் செய்யாமல் தந்தையின் பெயரை இனிஷியலாக வைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்கின்றனர். பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் உங்களில் ஒருவர்.
திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையுடன் சுற்றிக்கொண்டு உள்ளனர். 2021-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் உள்ள விஷயங்களே இதிலும் உள்ளன. சட்டப்பேரவை தேர்தலுக்கு அடித்துவிட்டு மக்களவை தேர்தல் எனவும், 2021 என்பதை 2024 எனவும், பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைப்பில் குறிப்பிட்டுள்ள தொகைகளை மாற்றி வழங்கி வருகின்றனர். முழு பொய்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு தேர்தல் அறிக்கை என்கின்றனர்.
520-க்கும் மேற்பட்ட தேர்தல் அறிக்கையில் 20-னை மட்டும் நிறைவேற்றிவிட்டு 99 சதவீதத்தையும் நிறைவேற்றிவிட்டோம் என முதல்வர் கூறுகிறார். அதற்கு வெள்ளை அறிக்கை வழங்க வேண்டும். அதிமுக ஏன் தேர்தலில் நிற்கிறது என்றால் பிரதமர் யார் என அடையாளம் காட்ட போகிறார்களாம். அதற்கு எதற்கு தேர்தலில் நிற்க வேண்டும். பாஜகவுக்கும் - திமுகவுக்கும் இடையேதான் போட்டி. இது உண்மைக்கும் - பொய்யுக்கும், வளர்ச்சிக்கும் - வீழ்ச்சிக்கும், ஏழைக்கும் - பணக்காரர்களுக்கும் இடையேயான போட்டி.
25 நாட்கள் ஒவ்வொருவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக, தாமரைக்காக செலவிடுங்கள். அடுத்த 5 ஆண்டுகள் உங்களுக்கு செந்தில்நாதன் சேவை செய்வார். விநாயகர் சிவன், பார்வதியை சுற்றியது போல செந்தில்நாதன் நம்மை சுற்றி வந்துள்ளார். நாம் அவருக்கு களப்பணியாற்றுவோம். 10 சதவீத இடங்களுக்கு கூட அவரால் நேரில் செல்ல முடியாது. நாம் அவருக்காக பணியாற்றுவோம். ‘பாஜக மற்றும் மோடி’ என்றால் வளர்ச்சி.
சில்வர் டப்பா, கொலுசு, டோக்கன் போன்ற இலவசங்களுக்கு மயங்காதீர்கள். இதை கொடுத்தவர்கள் சிறையில் உள்ளனர். அடுத்து திகார் சிறைக்குதான் போகவேண்டும். 90 சதவீத்துக்கும் மேல் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். கரூர் தொகுதியின் வெற்றியை நாடே திரும்பி பார்க்கவேண்டும் என்றார்.
இதில் கூட்டணி கட்சிகளான பாமக, அமமுக, இந்திய ஜனநாயக கட்சி, ஒபிஎஸ் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தேர்தல் பணிமனையை அண்ணாமலை திறந்துவைத்து செய்தியாளர்களிடம் கூறியது: திமுக மாவட்ட செயலாளர் சிறையில் உள்ளார். கரூர் எம்.பி. ஜோதிமணி வேடந்தாங்கல் போல வந்து செல்கிறார். 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜக அளித்த 295 வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி உள்ளது.
தமிழகத்துக்கு மீண்டும் மோடி வருகிறார். ஏப்.2-ம் தேதிக்கு பிறகு தேதி கூறப்படும். எங்கு வருகிறார் என்பது குறித்து பிறகு அறிவிக்கப்படும். கரூர் மாவட்டத்தில் கிராமப்புறத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரில் ஒருவரை அழைத்து வரவேண்டும் என மிக ஆவலாக உள்ளோம். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT