Published : 06 Feb 2018 09:28 AM
Last Updated : 06 Feb 2018 09:28 AM

நம்பிக்கைக்கு நான் கியாரண்டி..!: நோயை வென்ற மதுரைக்காரர்

பு

ற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்த ஒருவர், தன்னைப்போல் மற்ற நோயாளிகளும் அந்த உயிர்க்கொல்லி நோயிலிருந்து மீண்டு வர திருமணமே செய்து கொள்ளாமல் 25 ஆண்டுகளாக அவர்களுக்கு நம்பிக்கை ஒளி ஏற்படுத்தும் சேவையில் ஈடுபட்டுள்ளார்.

இன்னும் சொல்வதென்றால் அவர்களுக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். மதுரை மூன்றுமாவடியைச் சேர்ந்த பிலிப் ஜெயசேகர்தான் அவர். வயது 50. தினமும் காலை 10.30 மணிக்கு பணிக்குச் செல்வதுபோல் வீட்டில் இருந்து புறப்படுகிறார். நேராக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை புற்றுநோய் மருந்தியல் துறை வார்டுகளுக்குச் செல்லும் அவர், அங்கு இறக்கும் தருவாயில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் புற்றுநோயாளிகளைச் சந்திக்கிறார்.

அவர்கள் ஒவ்வோரிடமும் தனித்தனியாக மனம்விட்டு பேசும் அவர், தன்னுடைய புற்றுநோய் அனுபவங்களையும், அதிலிருந்து மீண்டுவந்த கதையையும் சொல்லி அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார். சரியாக மதியம் 12.30 மணியானதும், அந்த நோயாளிகளுக்கு வீட்டில் இருந்து வாளியில் எடுத்து வந்த கஞ்சியை எடுத்துச் சென்று அனைத்து நோயாளிகளுக்கும் கொடுக்கிறார்.

நம்பிக்கை வாசகங்கள்

நோயாளிகளை போய் பார்ப்பது, அவர்களுக்கு நம்பிக்கை விதையை விதைப்பது, கஞ்சி தானம் செய்வது என்ற இவரது இந்த சேவை ஏதோ ஒரு நாள், இரண்டு நாளல்ல. தினமும் செய்கிறார். அதோடு நிற்காமல் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வாசகங்களை புற்றுநோய் வார்டுகள், சிகிச்சை அறை வளாகங்கள் முழுவதும் அந்த நோயாளிகள் கண்ணில் படும் இடமெல்லாம் எழுதி தொங்கவிட்டுள்ளார்.

‘‘புற்றுநோய் இல்லாத புது உலகத்துக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதற்காகத்தான் திருமணமே செய்துகொள்ளவில்லை, இந்த பிறவி அவர்களுக்கானது ’’ என்கிறார் பிலிப் ஜெயசேகர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் ஒரு மதிய வேளையில் நோயாளிகளுக்கு கஞ்சி ஊற்றிக்கொண்டிருந்தவரை சந்தித்தோம்.

‘‘என்னோட சொந்த ஊர் நாகர்கோவில். என்னுடன் பெற்றோருக்கு 4 பிள்ளைகள். 1980-ல் அப்பா புற்றுநோயால் இறந்துவிட்டார். வறுமையால் ஒருபுறம் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் சிரமப்பட்டாலும் எங்கம்மா எங்கள் எல்லோரையும் ஓரளவு படிக்க வைத்தார்.

எலக்ட்ரானிக் மெக்கானிக் படிப்பை முடித்துவிட்டு ஆசை ஆசையாக எல்லோரையும்போல நானும் பல கனவுகளுடன் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றேன். பணியில் சேர்ந்த ஒரு சில மாதங்களிலேயே என் வாழ்க்கையில் இடிவிழுந்தது. எங்கப்பாவைப்போல எனக்கும் புற்றுநோய் வந்தது. குடும்பமே அதிர்ந்துவிட்டது.

ஆறுதல் அடைந்தேன்

நானோ ‘கடவுளே எனக்கு ஏன் இந்த வயசுல இந்த நோய் வரணுமா? ’ என கண்கலங்கி நின்றேன். அப்போது எனக்கு வயது 26. இப்போதுள்ள விழிப்புணர்வு, சிகிச்சை வசதிகள் அன்றைக்கு இல்லை. வாழ்க்கையே போய்விட்டதாக நினைத்தேன். சென்னையில் ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். நோயும், வலியும் குறைந்தபாடில்லை. கையில் வைத்திருந்த பணமெல்லாம் கரைந்துவிட்டது. அடுத்து என்ன செய்வது என திக்கு தெரியாமல் நின்றபோது எனது அக்கா, என்னை மதுரைக்கு வரவழைத்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தார். என்னுடன் சிகிச்சையில் இருந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ரத்தத்தில், தலையில், கழுத்தில், நாக்கில் கண்ணில் என்று ஒவ்வொரு இடங்களிலும் புற்றுநோய் கட்டிகள். 3 வயது குழந்தைகள் முதல் 80 வயது பாட்டிகள் வரை நாட்களை எண்ணிக்கொண்டிருந்தனர். பார்க்கவே பரிதாபமாக இருந்த அவர்களைப் பார்த்து நான் ஆறுதல் அடைந்தேன்.

ஆரம்பத்தில் என்னைச் சேர்த்த போது ஸ்டெச்சரில் வைத்துக் கொண்டுபோனார்கள். இடுப்பில் கீழே எல்லாமே செயலிழந்து விட்டது. நோய் முற்றிய பிறகு கொண்டு சென்றதால் எங்கள் குடும்பத்தினரை அங்கிருந்த டாக்டர் கள் கடிந்துகொண்டார்கள். அடுத்த சில வாரத்தில் அவர்களே ஆச்சரியப்படு மளவுக்கு எழுந்து நடக்க ஆரம்பித்தேன். அந்த காலகட்டங்களில் நான்பட்ட கஷ்டங்கள் குறித்து சொல்ல வார்த்தைகளே கிடையாது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்தான் புற்றுநோய் எனக்கு குணமடைந்தது.

புற்றுநோய்க்கு நவீன சிகிச்சைகளும், மருந்துகளும் அரசு மருத்துவமனையிலேயே தாராளமாகக் கிடைத்தாலும் அதற்கான விழிப்புணர்வு, மக்களிடம் இன்னமும் குறைவாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இந்த நோயை தீர்க்கவே முடியாத நோயாக பலரும் எண்ணுகின்றனர்.

இந்த நோயை முழுமையாக குணப்படுத்தலாம். இதை டாக்டர்களே சொன்னாலும் நம்மை ஆறுதல்படுத்த சொல்வதாக நோயாளிகள் நம்புவதில்லை. அவர்களுக்கு ஒரு நம்பிக்கை தேவைப்படுகிறது. அந்த நம்பிக்கையை புற்றுநோயில் இருந்த மீண்ட நான் போய் சொல்லும்போது அவர்கள் நம்புகின்றனர். அனேக நண்பர்கள் உதவியுடன் நோயாளிகளுக்கு கஞ்சி ஊற்றுவது, சாப்பாடு வாங்கிக் கொடுப்பது போன்ற அவர்களுக்குத் தேவையான சிறுசிறு உதவிகளைச் செய்கிறேன்.

பராமரிப்பு இல்லம் தேவை

புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்றால் உகந்த சூழல் இல்லை. கவனிப்பு, அன்பு, சத்துணவு கிடைக்காது. வீட்டில் போய் சோர்ந்து போய்விடுகிறார்கள். அதற்கு குடும்பச் சூழல், பொருளாதாரம் போன்ற பலவிதமான காரணங்கள் இருக்கலாம். அதனால், அவர்களுக் காக ஒரு பராமரிப்பு இல்லம் மதுரையில் கட்ட வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம் என்றார்.

தனது பிறப்பை நோயாளிகளுக்காக அர்ப்பணித்த பிலிப் ஜெயசேகரின் லட்சியம் நிறைவேற வாழ்த்துவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x