Published : 26 Mar 2024 07:30 PM
Last Updated : 26 Mar 2024 07:30 PM
தூத்துக்குடி: "2019-ல் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மதுரையில் அடிக்கல் நாட்டினார் பிரதமர். அப்போது பிரதமருடன் அமர்ந்திருந்த நான் சிரித்துக் கொண்டிருந்தேன். அதை உதயநிதி ஸ்டாலின் கொச்சைப்படுத்தி, நான் பல்லைக் காட்டிக்கொண்டு இருப்பதாக கூறினார். சிரித்தால் என்ன தெரியும்? பல்லு தானே தெரியும். நீங்கள் காட்டினால் சரி, நான் காட்டினால் தவறா?" என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: "தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்தபோது, தூத்துக்குடி மக்களை நேரில் சந்தித்து நான் ஆறுதல் கூறினேன். எங்கு பார்த்தாலும் தண்ணீர் மற்றும் வெள்ளத்தால், கடல்போல் தூத்துக்குடி நகரம் காட்சி அளித்துக் கொண்டிருந்தது. மக்களை நேரில் சந்தித்து நான் ஆறுதல் கூறினேன்.
நான் தூத்துக்குடிக்கு வருகிறபோதே, என்னால் முடிந்த நிவாரணப் பொருட்களை கொண்டு வந்தேன். ஆனால் அந்த நிவாரணப் பொருட்களை இறக்கக்கூட முடியவில்லை. இடுப்பளவு தண்ணீர் சூழந்திருந்தது. அப்படியிருந்தும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை நான் வழங்கிவிட்டுச் சென்றேன். எதற்காக சொல்கிறேன் என்றால், ஒரு அரசாங்கம் என்பது மக்கள் பாதிக்கப்படும்போது ஓடோடி வந்து உதவி செய்ய வேண்டும்.
மக்களுக்கு துன்பம் ஏற்படுகிறபோது ஓடோடி வந்து உதவி செய்யும் அரசுதான் ஒரு நல்ல அரசாங்கம். இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்தாரா? பதவியும், ஆட்சி அதிகாரமும் தானே அவர்களது கண்ணுக்குத் தெரிந்தது. வாக்களித்த மக்களைப் பற்றி கவலைப்படாத முதல்வர் இன்றைய தமிழக முதல்வர். அவருக்கு வாக்களித்ததால் மக்களுக்கு என்ன பயன்? மக்களின் கஷ்டத்தின்போது உதவி செய்யதா ஒருவர் உங்களுக்கு தேவைதானா?
அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி நகரத்துக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி கொடுத்தோம். அதில் பஹில் ஓடை 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுவிட்டது. இருபது சதவீத பணிகள் மட்டும்தான் இருந்தது. அதைகூட திமுக இரண்டாண்டு காலமாக செய்யவே இல்லை. கமிசனுக்காக அந்த திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டனர். பஹில் ஓடை கட்டுமானத்தை முடித்திருந்தால், வெள்ளத்தின்போது தண்ணீர் தேங்காமல் வெளியேறி இருக்கும். அதை செய்யாததால், தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிட்டது.
கிட்டத்தட்ட 10 அடி தண்ணீரில் கார்கள் எல்லாம் மிதந்ததை நான் பார்த்தேன். நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் மழை வெள்ளத்தால் பழுதடைந்தன. அதை சரிசெய்வதற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யவில்லை. இதனால், பொதுமக்கள் கடுமையான பாதிக்கப்பட்டனர். அந்த நேரத்தில் மின்சாரம் தடைபட்டு விட்டது. குடிநீர் கிடைக்கவில்லை. தமிழக அரசு வேகமாக செயல்பட்டு போர்க்கால அடிப்படையில் மின்சாரம் வழங்கியிருக்க வேண்டும். மிக்ஜாம் புயலின்போது பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு செயல்படாத அரசாங்கத்தைப் பார்த்தனர். இந்த அரசாங்கம் தேவைதானா, அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளரை நீங்கள் தேர்வு செய்வது சரியா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
முதல்வர் ஸ்டாலின் எப்போது பேசினாலும் அதிமுக கள்ளக் கூட்டணி வைத்திருப்பதாக விமர்சனம் செய்து வருகிறார். அவருக்கு கள்ளக் கூட்டணி வைத்துக்கொள்கிற பழக்க தோஷம் இருக்கும்போலத் தெரிகிறது. இதுவரைக்கும் எந்த கட்சித் தலைவரும் இப்படி கூறியது கிடையாது. கள்ளக் கூட்டணி வைத்தது யார் என்பதை இந்த நேரத்தில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்தான் பிரதமர் மோடியுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளனர். சிரித்தால் என்ன தெரியும்? பல்லு தானே தெரியும். உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார்... 2019-ல் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மதுரையில் அடிக்கல் நாட்டினார் பிரதமர். அப்போது பிரதமருடன் அமர்ந்திருந்த நான் சிரித்துக் கொண்டிருந்தேன். அதை உதயநிதி ஸ்டாலின் கொச்சைப்படுத்தி, நான் பல்லைக் காட்டிக்கொண்டு இருப்பதாக கூறினார். நீங்கள் காட்டினால் சரி, நான் காட்டினால் தவறா?” என்று கூறி, உதயநிதி பிரதமருடன் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை எடுத்துக் காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சிரிப்பது தவறா? ஸ்டாலினிடம் சிரிப்பே வராது. ஸ்டாலின் என்றாவது சிரிப்பதை பார்த்திருக்கிறீர்களா? இதுதான் கள்ளக் கூட்டணிக்கான சான்று. இது சாட்சி. அதிமுகவைப் பொறுத்தவரை மறைமுகமாக நாங்கள் யாருக்குமே ஆதரவு தரமாட்டோம். நாங்கள் நினைத்திருந்தால், பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்போம். எங்களுக்கு அவசியம் இல்லை. பதவிவெறி பிடித்த கட்சி அதிமுக அல்ல.மக்களுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக" என்று இபிஎஸ் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT