Published : 26 Mar 2024 06:40 PM
Last Updated : 26 Mar 2024 06:40 PM
தூத்துக்குடி: “பாஜகவின் ஒவ்வொரு நகர்வையும் மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட இந்திய மக்கள் நிச்சயம் பாஜகவைத் தூக்கி எறிவார்கள்” என்று திமுக பொதுச் செயலாளரும், தூத்துக்குடி வேட்பாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் இரண்டாவது முறையாக களமிறங்கும் திமுக வேட்பாளர் கனிமொழி 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதில்கள் பின்வருமாறு:
மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இது தேர்தலில், இண்டியா கூட்டணியில் செயல்திறனை பாதிக்கும் எனக் கருதுகிறீர்களா?
“பாஜகவின் ஒவ்வொரு நகர்வையும் நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். காங்கிரஸ் மட்டுமல்ல, நிறைய பத்திரிகையாளர்கள் கூட இந்த ஆட்சியில் ஒடுக்கப்படுகிறார்கள். பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு அதனை எதிர்த்துக் கேள்வி எழுப்பினால் பிடிக்கவில்லை என்பதைத் தான் இது காட்டுகின்றது. எதிர்க்கட்சியினரை மட்டுமல்ல சாமானியர்களைக் கூட சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை போன்ற மத்திய அமைப்புகளைக் கொண்டு பாஜக மிரட்டுகிறது. ஆனால், இந்திய மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால் அவர்கள் இந்த நிலை தொடரவிட மாட்டார்கள் என நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம்.”
அண்மையில் டெல்லி உயர் நீதிமன்றம் 2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது. இது திமுகவின் தேர்தல் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
“அதுமட்டுமல்ல, இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கூட அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அதனால், நாங்கள் அனைவரும் இதனை எதிர்த்துப் போராட ஒன்றிணைவோம்.”
சர்வதேச போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் என்சிபி-யால் கைது செய்யப்பட்டவர்களுடன் திமுகவுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனரே?
“நாங்கள் போதை மருந்துக்கு எதிரானவர்கள். போதைப் பொருள் விற்போருக்கும் எதிரானவர்கள். அத்தகையோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஆனால், ஒவ்வொருமுறையும் அப்படிப்பட்டவர்களை திமுகவுடன் தொடர்புபடுத்தப்படுவது ஏற்கத்தக்கதல்ல. சில நேரங்களில் சிலரின் முழு பின்னணியும் ஆராயப்படாமல் கட்சியில் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கலாம். அதற்காக கட்சி அத்தகையோரைக் காப்பாற்றுகிறது என்று அர்த்தமில்லை. அந்த நபர் இப்போது கட்சியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.”
தேர்தலில் சிறிய கட்சிகள்கூட பெண்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் கொடுத்துள்ள நிலையில் திமுக போன்ற பெரிய கட்சிகள் அதனைச் செய்யவில்லை என்ற புகார் இருக்கிறது. பெண்கள் உரிமைப் பற்றி உரக்கப் பேசிக் கொண்டு பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கவில்லை என விமர்சிக்கப்படுகிறது. இந்த பாலின இடைவெளியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
“தேர்தலைப் பொறுத்தவரை பெண்கள் பிரச்சினைகள் பல எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும். நிறைய பெண்களுக்கு சொத்து இருந்தும் அதனை பயன்படுத்த, நிர்வகிக்கக் தெரிவதில்லை. அதனால் அடிப்படையிலேயே மாற்றப்பட வேண்டிய சிக்கல்கள் நிறைய உள்ளன. இருந்தும் திமுக 3 பெண்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. இப்போதும் கூட நாங்கள் மகளிரை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கடைமட்டத்தில் இருந்து பெண்களுக்கு அதிகாரமளித்தலை வலுப்படுத்தி வருகிறோம். அதற்கு பதிலும் கிடைத்துள்ளது.”
திமுகவும், அதிமுகவும் பாஜகவை தமிழகத்தில் ஒரு போட்டியாகவே கருதவில்லை எனக் கூறுகின்றன. ஆனால் 2024 தேர்தலிலும் பாஜகவை அப்படி அசட்டை செய்வது சரியான பார்வையா?
“கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் பாஜகவின் வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. அதேபோல் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்குக் கிடைத்த வெற்றி அது சார்ந்திருந்த கூட்டணியால் சாத்தியமானது என்பதையும் கவனிக்க வேண்டும். ஆகையால், வாக்கு சதவீதத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த முன்னேற்றத்தை கட்சியின் செயல்திறனாக கணிக்கக் கூடாது.”
கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக தமிழகத்துக்கு என்று பெரிய திட்டங்களைக் கொண்டுவரவில்லை. 38 எம்.பி.க்கள் இருந்தும் பயனில்லை என எதிர்க்கட்சிகள் கூறுகின்றனவே. அதில் உங்கள் கருத்து என்ன?
“நாங்கள் கோரும் திட்டங்களும், நிதியும் மாநில மக்களுக்கானதே தவிர எங்கள் கட்சிக்கானது இல்லை என்பதை மத்திய அரசாங்கம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக எப்போதுமே எங்களைப் புறக்கணிக்கிறது. வெள்ள நிவாரணத்துக்காக நாங்கள் இதுவரை மத்திய அரசிடம் இருந்து ஒரு பைசா கூட பெறவில்லை. ஆனால், எங்கள் முதல்வர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருக்கும் உதவினார். வீடுகளை முற்றிலுமாக இழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் கொடுத்தோம். மாநிலத்துக்காக கடுமையான முயற்சிகளுக்குப் பின் பல திட்டங்களைப் பெற்றுள்ளோம்.”
தேசிய ஜனநாயக கூட்டணி மோடியை பிரதமர் முகமாக அடையாளப்படுத்தியுள்ளது. இண்டியா கூட்டணி இன்னும் யாரையும் அப்படி அடையாளப்படுத்தவில்லை. இது கூட்டணிக்கு சறுக்கல் இல்லையா?
“ஜனநாயகத்தில் ஒரு கட்சியின் அடையாளமாக ஒரு தனிநபரை முன்னிலைப்படுத்துவது அபாயகரமானது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மோடியை சுற்றி வருகிறது. ஆனால் இண்டியா கூட்டணி சித்தாந்தத்தை முன்னிலைப்படுத்துகிறது. பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமலேயே கட்சிகள் தேர்தலில் வென்ற முன் உதாரணங்கள் பல இருக்கின்றன.”
தூத்துக்குடியில் இரண்டாம் முறை களம் காண்கிறீர்கள். மாவட்டத்துக்கு நீங்கள் கொண்டுவரக் கூடிய நீண்ட கால திட்டங்கள் என்னவாக இருக்கும்?
“நாங்கள் மாவட்டத்தில் நிறைய தொழிற்சாலைகளைக் கொண்டுவர இருக்கிறோம். வேலைவாய்ப்பை அதிகரிக்க அது உதவும். மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவுவதால், ‘363’ என்ற நீர்த்திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம். இது ஊரகப் பகுதியில் உள்ள 363 இடங்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தரும். மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதில் புதிதாக அமையும் மத்திய அரசு எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்த்து நிறைவேற்றும் என நம்புகிறோம்.”
நேர்காணல் - சி.பழனிவேல் ராஜன் | தொகுப்பு: பாரதி ஆனந்த்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT