Published : 26 Mar 2024 03:33 PM
Last Updated : 26 Mar 2024 03:33 PM
கோவை: “பதிவு செய்யப்பட்டுள்ள எண்கள் அனைத்துக்கும் மூன்று முறை அழைத்து வாக்கு சேகரிக்க வேண்டும்” என்று பாஜக நிர்வாகிகளுக்கு கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட புளியகுளம் பகுதியில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடந்தது.கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தலைமை வகித்து பேசியது: "கோவை தெற்கு தொகுதியில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். மற்ற தொகுதிகளுக்கு முன்னுதாரணமாக இந்த தொகுதி விளங்குகிறது.
நடைபெற உள்ள மக்களவை தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பொறுப்பேற்பார். ஜூன் 4-ம் தேதி அரசியல் புரட்சி ஏற்பட உழைத்து வருகிறோம். நம்மை மூன்றாம் அணி என்று சொல்லியவர்கள் மத்தியில் முதல் அணியாக பாஜக வரும் என்பதை நிரூபித்து காண்பிக்க வேண்டும்.
கடந்த 1999-ல் பாஜக வெற்றி பெற்றதை போல் மீண்டும் இந்த முறை வெல்ல போகிறது. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள தொகுதிகள் அனைத்தும் வேகமாக வளர்ச்சிப் பெற்று வருகின்றன. நாகரிகமான கலாச்சாரம் மற்றும் அதிக அளவிலான கல்லூரிகள் கோவையின் பெருமையாக உள்ளன. ஆனால், கோவையின் வளர்ச்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 10 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை தற்போது 30 சதவீத பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மக்களவைத் தேர்லுக்கு பின் அந்தத் தொகை வழங்கப்படுவதையும் திமுக அரசு நிறுத்திவிடும். கோவை மக்கள் அறிவாளிகள். திமுக ஆட்சிக்கு வந்து 33 மாதங்களாகியும் சிலிண்டருக்கு மானியம் வழங்கவில்லை. எவ்வித வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளவில்லை. மக்களை முட்டாள்களாக மாற்றவே நினைக்கின்றனர்.
பிரதமர் மோடி நாட்டுக்காக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறார். அனைவரின் கையிலும் மொபைல்போன் என்ற ஆயுதம் உள்ளது. பதிவு செய்யப்பட்டுள்ள எண்கள் அனைத்துக்கும் மூன்று முறை அழைத்து வாக்கு சேகரிக்க வேண்டும். டிவி சீரியல், பேப்பர் படிக்கும் நேரம், பேருந்தில் செல்லும் நேரங்களில் வாக்கு சேகரிக்க வேண்டும். பக்கத்து வீடுகளுக்கு சென்று 10 நிமிடங்கள் பேச வேண்டும். கோவையின் வெற்றி மக்களின் வெற்றியாக மாற வேண்டும்” என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT