Published : 26 Mar 2024 01:34 PM
Last Updated : 26 Mar 2024 01:34 PM
திருப்பூர்: அரசியல் கட்சிகளுடன் சண்டை போடுவதற்காக போட்டியிடவில்லை. மாற்றத்திற்காக நான் போட்டியிடுகிறேன் என்றும் மூன்றாவது முறை பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் குழாய் மூலம் காஸ் விநியோகம் செய்யப்படும் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், “கொங்கு மண்டல விவசாயிகள் மற்றும் தொழில்துறையினரின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படும். வட அமெரிக்காவில் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி வரியை நீக்கியதன் மூலம் குறைந்த விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் நிலத்தடி நீர்மட்டம் 13 மீட்டர் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்திருக்கிறது. மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 400 எம்.பி-க்களை பெற வேண்டும். 400 எம்.பி-க்களை பெற்றால் நதிநீர் இணைப்பை செயல்படுத்தலாம். அரசியல் கட்சிகளுடன் சண்டை போடுவதற்காக போட்டியிடவில்லை. மாற்றத்திற்காக நான் போட்டியிடுகிறேன். மூன்றாவது முறை பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் குழாய் மூலம் காஸ் விநியோகம் செய்யப்படும்.
எம்.பி. பதவி என்பது முள் மெத்தை போன்றது. குதிரையிடம் லகான் போட்டு வேலை வாங்குவதைப் போல பிரதமர் மோடி வேலை வாங்குவார். அவரிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. இந்த முறை நாம் மாற்றத்துக்காக நின்று கொண்டிருக்கிறோம். மோடி மத்தியிலே 400 எம்.பி.,க்கள் உடன் ஆட்சியில் இருந்து, இங்கே பாரதிய ஜனதா கட்சி கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அதைவிட ஒரு மாபெரும் தவறை இந்தக் கட்சி எப்பொழுதும் செய்ய முடியாது.
அதனால் நானே களத்துக்கு வர வேண்டிய கட்டாயமும், நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. மூத்த தலைவர்கள் அனைவரையும் களத்துக்கு கொண்டு வந்திருக்கிறோம். நான் அரசியலில் விடுமுறை எடுத்ததே கிடையாது. என் அம்மாவைப் பார்த்து 2 மாதங்கள் ஆகிவிட்டன. என் மண் என் மக்கள் யாத்திரை ஆரம்பித்ததில் இருந்து கடந்த எட்டு மாதங்களாக விடுப்பே கிடையாது. இப்பொழுது மாற்றம் நடக்கவில்லை என்றால் எப்பொழுதும் மாற்றம் நடக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT