Published : 26 Mar 2024 12:09 PM
Last Updated : 26 Mar 2024 12:09 PM
திருவண்ணாமலை: “திமுகவுக்கு தூக்கம் போய்விட்டது என்று பிரதமர் மோடி சொல்கிறார். ஆமாம், அவர் சொல்வது போல் எங்களுக்கு தூக்கம் போய்விட்டது. பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் வரை நாங்கள் தூங்கப்போவதில்லை” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (மார்ச் 26) திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “அண்ணாதுரைக்கு வாக்கு கேட்டு கருணாநிதியின் பேரன் வந்திருக்கிறேன். அண்ணாதுரையை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறவைத்தால் மாதம் இரண்டு முறை இங்கு வந்து நான் தங்கி தொகுதி பிரச்சினையை சரி செய்வேன்.
திமுகவுக்கு தூக்கம் போய்விட்டது என்று பிரதமர் மோடி சொல்கிறார். ஆமாம், அவர் சொல்வது போல் எங்களுக்கு தூக்கம் போய்விட்டது. பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் வரை நாங்கள் தூங்கப்போவதில்லை. தேர்தல் பிரச்சாரத்தை தூக்கமில்லாமல் மேற்கொள்ள போகிறோம். திமுக இளைஞரணியினர் அடுத்த 22 நாட்கள் தூங்காமல் வேலை பார்க்க வேண்டும். தேர்தலுக்காக சிலிண்டர் விலையை குறைப்பது போல் பிரதமர் மோடி நாடகமாடுகிறார்.
உதயநிதிக்கு வேலையே இல்லை, எப்போது பார்த்தாலும் ஒரு செங்கலை காண்பிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆம், நான் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்கும் வரை செங்கலை காண்பிப்பேன். பிரதமருடன் சிரித்து கூட்டு வைத்துக்கொண்டு மாநிலத்தின் மொழி உரிமை, நிதி உரிமையை தாரைவார்த்தவர்தான் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில் மழை, வெள்ளம் வந்த போது வராத பிரதமர் மோடி, தற்போது பத்து முறை தமிழகம் வந்துள்ளார். தேர்தலுக்காக இப்போது அடிக்கடி தமிழகம் வருகிறார். மழை, வெள்ளம் வந்த போது தமிழக மக்களுக்கு அனைத்து உதவியையும் செய்தவர் முதல்வர் ஸ்டாலின். திருவண்ணாமலைக்கு தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள திட்டங்கள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். அதற்கு நான் உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT