Published : 26 Mar 2024 11:19 AM
Last Updated : 26 Mar 2024 11:19 AM

ராஜபாளையம் | ஊதிய உயர்வு வழங்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு: டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் அறிவிப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி அலுவலகம் முன் ஊதிய உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.

ராஜபாளையம் பகுதியில் பரவிய டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த 2013ம் ஆண்டு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதையடுத்து நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஊதிய உயர்வு, முழு நேர வேலை கேட்டு நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறுகையில், “ராஜபாளையம் நகராட்சியில் 184 டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளோம். கடந்த 2013-ம் ஆண்டு தினசரி ரூ.80 ஊதியம் என்ற அடிப்படையில் பணியில் சேர்ந்தோம். அதன்பின் ரூ.182 ஆக ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.208 ஆக உயர்த்தப்பட்டது. ஊதிய உயர்வு கேட்டு நகராட்சி தலைவர் தொடங்கி, எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர், முதல்வர் வரை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

டெங்கு ஒழிப்பு பணி மட்டுமின்றி கரோனா காலத்தில் முன் களப்பணி, குப்பை தரம் பிரித்தல், பாதாள சாக்கடை கணக்கெடுப்பு, அரசு விழாக்கள் ஒருங்கிணைப்பு, வரி வசூல், தேர்தல் விழிப்புணர்வு, வாக்குச்சாவடி பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொண்டு வருகிறோம். எங்களுக்கு அடையாள அட்டை, சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் வழங்கப்படவில்லை.

மாவட்டத்தில் உள்ள பிற நகராட்சிகளில் தினசரி ரூ.400 க்கு மேல் ஊதியம் வழங்கும் நிலையில் எங்களுக்கு ரூ.208 மட்டுமே வழங்குகின்றனர். பி.எப், இ.எஸ்.ஐ பிடித்தம் செய்வதில்லை. ஊதிய உயர்வு வழங்காவிட்டால், தேர்தல் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடும் நாங்களே, தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடும் முடிவில் உள்ளோம்” என்று எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x