Published : 26 Mar 2024 08:23 AM
Last Updated : 26 Mar 2024 08:23 AM

ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவில் குண்டம் இறங்கிய அமுதா ஐஏஎஸ்

தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் குண்டம் இறங்கி வழிபாடு செய்தார்.

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா, கடந்த 11-ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில், அம்மன் திருவீதி உலாவும், 19-ம் தேதி இரவு கம்பம் சாட்டு விழாவும் நடந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நேற்று தயாரானது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள் எரியூட்டப்பட்டு, 12 அடி நீளம், எட்டு அடி அகலத்தில் கோயில் முன்பாக நேற்று இரவு குண்டம் தயாரானது.

அம்மன் அழைத்தல் நிகழ்வு : இதை தொடர்ந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணி அளவில், தெப்பக்குளத்தில் இருந்து, மேள, தாளம் முழங்க அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. குண்டத்தைச் சுற்றிலும் கற்பூரம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை 4 மணியளவில் பக்தர்கள் கோஷம் முழங்க, கோயில் பூசாரி ராஜசேகர் மற்றும் கோயில் பூசாரிகள், கட்டளைதாரர்கள், அறங்காவலர்கள் உள்ளிட்டோர் குண்டம் இறங்கினர்.

இவர்களைத் தொடர்ந்து ஏற்கனவே புனிதநீராடி, கையில் வேப்பிலையுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தமிழக அரசு உள்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ், ஜஜி முருகன், பவானிசாகர் தொகுதி எம்எல்ஏ பண்ணாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: குண்டத்தின் இரு பகுதிகளிலும் தீயணைப்புத்துறை வீரர்கள் பாதுகாப்புப்பாக நிறுத்தப்பட்டு, பக்தர்கள் முறையாக குண்டமிறங்க உதவினர்.

தமிழகம், கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர்கள், காவல்துறையினர், அதிரடிப்படையினர், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், திருநங்கையர் என பல்லாயிரக்கணக்கானவர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை வரை பக்தர்கள் குண்டம் இறங்கிய பின், கால்நடைகள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவுள்ளது.

குண்டம் விழாவையொட்டி, பண்ணாரி அம்மன் தங்கக் கவசம் அணிந்து வீணை அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதேபோல் உற்சவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

பண்ணாரி மரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவிவையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து பண்ணாரிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

குண்டம் திருவிழாவின் தொடர்ச்சியாக நாளை (27-ம் தேதி) புஷ்பரத ஊர்வலமும், 28-ம் தேதி மஞ்சள் நீராட்டுவிழாவும், 29-ம் தேதி தங்கரத புறப்பாடும் நடக்கிறது. ஏப்ரல் 1-ம் தேதி மறுபூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவடைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x