Published : 26 Mar 2024 05:20 AM
Last Updated : 26 Mar 2024 05:20 AM

தேர்தல் பணிக்காக மேலும் 165 கம்பெனி துணை ராணுவப் படை வருகை: தலைமை அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

கோப்புப்படம்

சென்னை: தேர்தல் பணிக்காக மேலும் 165 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகம் வர உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக ஏற்கெனவே 25 கம்பெனி துணை ராணுவப் படை வீரர்கள் வந்துள்ளனர். மேலும் 165 கம்பெனி துணை ராணுவப் படை வீரர்களை தமிழகத்துக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அவர்கள் ஏப்ரல் 1-ம் தேதி வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் மொத்தம் 190 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் கேட்டனர். 50 சதவீத வாக்குச்சாவடிகளுக்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. இணைய சேவை கிடைக்காத வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் நுண்பார்வையாளரை நியமித்து கண்காணிக்கவும், வீடியோ பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தபால் ஓட்டுக்காக மாற்றுத் திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 12-டி படிவம் வழங்கும் பணி இன்றுடன் (மார்ச் 25) நிறைவடைந்தது. வாக்குப்பதிவுக்கு முந்தைய ஏதாவது ஒரு நாளில் அவர்களது வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டுகள் பெறப்படும். சுமார் 7 லட்சம் பேர் இந்த படிவத்தை பெற்றுள்ளனர். கடந்த தேர்தலைவிட இந்த எண்ணிக்கை அதிகம்.

மார்ச் 17-ம் தேதி நிலவரப்படி, பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்காக மொத்தம் 17.28 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. அதில் 15.10 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டன. 5.57 சதவீத மனுக்கள் மட்டும் பரிசீலனையில் உள்ளன.

வேட்பாளர்களின் செயல்பாடுகளை தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இப்போது கூடுதலாக தொகுதிக்கு ஒரு பொது பார்வையாளர், 2 தொகுதிக்கு ஒரு காவல் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மார்ச் 26-ம் தேதி (இன்று) முதல் தொகுதிகளில் பணிகளை தொடங்குவார்கள்.

பிரதமர் மோடி குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாக பேசியதாக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி அறிக்கை அளிக்க தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊட்டியில் ஒரு பஞ்சாபி தம்பதியிடம் ரூ.68 ஆயிரம் தொகையை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள், சுற்றுலா செலவுக்காக வைத்திருந்த பணம் மொத்தமும் பிடிபட்டுள்ளது. இதுபற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஒருவர் ரூ.50 ஆயிரம் வரை பணம் கொண்டு செல்லலாம். ஒன்றுக்கு மேற்பட்டோர் சேர்ந்து செல்லும்போது ஒவ்வொருவரும் தங்களிடம் ரூ.50 ஆயிரம் பணம் வைத்திருப்பதில் தவறு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x