Published : 26 Mar 2024 05:25 AM
Last Updated : 26 Mar 2024 05:25 AM
சென்னை: கிருஷ்ணகிரி தொகுதி அதிமுகஎம்எல்ஏ வெற்றியை எதிர்த்து திமுக தொடர்ந்த தேர்தல் வழக்கில், நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை உயர் நீதிமன்ற பதிவாளர் தலைமையில் மீண்டும் எண்ண உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக சார்பில் செங்குட்டுவனும், அதிமுக சார்பில் அசோக்குமாரும் போட்டியிட்டனர். இதில், அசோக்குமார் 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து திமுக வேட்பாளர் செங்குட்டுவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில், அசோக்குமார் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே 605 தபால் வாக்குகளை செல்லாது எனக்கூறி தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டார். இதற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை. எனவே தேர்தல் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற பதிவாளரை நியமித்து அவர் முன்னிலையில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும், எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், 605 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரி போதிய காரணமின்றி நிராகரித்துள்ளார். இதுதொடர்பாக போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதால், நிராகரிக்கப்பட்ட 605 வாக்குகளையும் உயர் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் எண்ண வேண்டும் என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்த உத்தரவில் கூறியருப்பதாவது: கிருஷ்ணகிரி தொகுதி சட்டப்பேரவைத் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளையும் ஒரு மாத காலத்துக்குள் உயர் நீதிமன்ற பதிவாளர் தலைமையில், தேர்தல் ஆணையம் நியமிக்கும் இரு தேர்தல் அதிகாரிகள் மற்றும் அதிமுக, திமுக வேட்பாளர்களின் முன்னிலையில் மீண்டும் எண்ண வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை உயர் நீதிமன்ற பதிவாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT