Published : 25 Mar 2024 10:58 PM
Last Updated : 25 Mar 2024 10:58 PM
சென்னை: எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிடுகிறார் கனிமொழி. இந்நிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்த முக்கிய தகவல்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
“மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஒவ்வொரு நகர்வையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்களை நோக்கி யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என பாஜகவினர் விரும்புகின்றனர். அதன் காரணமாக எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது சாமானிய மக்களையும் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். அதற்காக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இந்திய மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். அதனால் இதனை தொடர அனுமதிக்க மாட்டார்கள் என நாங்கள் நம்புகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி மோடியை சார்ந்து அமைக்கப்பட்டுள்ளது. இண்டியா கூட்டணி சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டு இயங்குகிறது. இந்த ஐந்து ஆண்டு காலத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்த எம்.பி.க்கள் சார்பில் மக்கள் நல திட்டங்கள் சார்ந்து அதிகம் குரல் கொடுத்துள்ளோம்.
தூத்துக்குடி தொகுதியை பொறுத்தவரையில் அதிகளவிலான தொழிற்சாலைகளை கொண்டு வர விரும்புகிறோம். அதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் ஊரக பகுதிகளிலும் கவனம் செலுத்தும் வகையில் திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளோம். தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தும் கோரிக்கையை மத்தியில் அமையவுள்ள புதிய அரசு கவனிக்கும் என நம்புகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT