Published : 25 Mar 2024 06:30 PM
Last Updated : 25 Mar 2024 06:30 PM
மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அரசியல் கட்சி வேட்பாளர்களுடன் கூடுதல் நபர்களை கூட்டமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அனுமதித்ததால் அதிருப்தியடைந்த ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சங்கீதா, காவல் துறை அதிகாரிகளை நேரடியாக அழைத்து ‘டோஸ்’ விட்டதோடு மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகாரும் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல், ஆட்சியர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. இன்று திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததால், ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள், வாகனங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த மாநகர போலீஸார் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆட்சியர் அலுவலக சாலையில் போக்குவரத்தை இன்று முழுவதும் தடை செய்தனர்.
உலக தமிழ்ச் சங்க கட்டிடம், காந்தி அருங்காட்சியகம், மருத்துவக் கல்லூரி, ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் ஆகிய நான்கு இடங்களில் பேரிகார்டுகளை கொண்டு தடுப்புகள் அமைத்து, வேட்பாளர்களையும், அவர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறவர்களையும் மட்டுமே அனுமதிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், சாரை சாரையாக வந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் வேட்பாளர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்டோரை ஆட்சியர் அலுவலகம் முன் அனுமதித்துவிட்டனர்.
மேலும், வேட்பாளர்களுடன் வந்த பாஜக பிரச்சார வாகனங்களை கூட, ஆட்சியர் அலுவலக அருகே தடய அறிவியல் அலுவலகம் வரை போலீஸார் அனுமதித்துவிட்டனர். அதனால், ஆட்சியர் அலுவலகம் முன் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
ஆட்சியர் அலுவலகத்துக்குள் வேட்பாளர், அவருடன் 4 பேர் சேர்த்து மொத்தம் 5 பேரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்வதவற்கு அனுமதிக்க வேண்டும். ஆனால், பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன், அவரது மாற்று வேட்பாளர் மகா சுசிந்திரனுடன் கூடுதல் நபர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் வந்துவிட்டனர். வேட்புமனு தாக்கல் செய்யும் ஆட்சியர் அறையில் மாற்று வேட்பாளர் சுசிந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தபோது கூடுதலாக 2 நபர்கள் வந்துவிட்டனர். அதைப் பார்த்த ஆட்சியர் சங்கீதா, அவர்கள் யார் என்று மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், உளவுத்துறை போலீஸாரிடம் கேட்டனர். அப்போது அவர்கள் கூடுதலாக அவர்கள் ஆட்சியர் அறைக்குள் வந்தது தெரிய வந்தது.
அதிருப்தியடைந்த ஆட்சியர் சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலரை அழைத்து யார் இவர்களை உள்ளே விட்டது, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளை வரச் சொல்லுங்கள் என கூறினார். பாஜக மாற்று வேட்பாளர் சுசீந்திரன் முன்னிலையிலே, ஆட்சியர் அலுவலக தேர்தல் பாதுகாப்பு காவல் துறை அதிகாரியை அழைத்து, ''என் அலுவலகம் முன் எப்படி இவ்வளவு கூட்டம் வந்தது, வேட்பாளருடன் சேர்த்து ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும், பிறகு எப்படி இவர்களை அனுமதித்தீர்கள்'' என்று சத்தம் போட்டார். உடனடியாக போலீஸார், கூடுதலாக வேட்பாளருடன் வந்த நபர்களை வெளியேற்றினர்.
உடனடியாக ஆட்சியர் சங்கீதா, மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தை தொடர்புகொண்டு ஆட்சியர் அலுவலக தேர்தல் பணியில் போலீஸார் குளறுபடிகள் செய்து வருவதாக புகார் தெரிவித்தார். உடனடியாக மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து கூடுதலாக ஸ்ட்ரெக்கிங் போலீஸார் அனுப்பி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், ஆட்சியர் அலுவலகம் பகுதியில் அத்துமீறி வந்த திமுக, பாஜக, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ஆட்சியர் சங்கீதா, தனது இருக்கை முன் ஐந்து சேர்கள் மட்டும் போடுங்கள் என்று மற்ற சேர்களை அப்புறப்படுத்த கூறினார்.
இதைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், மற்ற சேர்களை அப்புறப்படுத்தினர். இந்த பரபரப்பான சூழலில் அதிமுக வேட்பாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அமைப்பு செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா உள்ளிட்ட ஐந்து பேருடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர். ஏற்கெனவே, கோபத்தில் இருந்த ஆட்சியர் சங்கீதா, அதிமுக வேட்பாளர், அவருடன் வந்த செல்லூர் கே.ராஜூ, ராஜன்செல்லப்பாவிடம், ''நீங்கள் எத்தனைபேர் வந்திருக்கிறீர்கள்?'' கேட்டார். அதிருப்தியடைந்த ராஜன் செல்லப்பா, ''எத்தனை பேர் வர வேண்டும், நீங்களே சொல்லுங்கள், சரியாகதான் வந்திருக்கிறோம், எண்ணிப் பாருங்கள்'' என அவரும் கோபத்துடன் வாக்குவாதம் செய்தார்.
உடனே ஆட்சியர் சங்கீதா சமாதானமடைந்து, சரி வேட்புமனு தாக்கல் செய்யுங்கள் என்று கூறி அதிமுக வேட்பாளரிடம் வேட்பு மனுவை பெற்றார். அலுவலகம் சாலையில் திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு செல்லும் வரை, அவர்களுடன் வந்த நிர்வாகிகள், தொண்டர்களை போலீஸாரால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. மேலும், வேட்பாளர்களுடன் அரசியல் கட்சி ஊர்வலத்தால் நகர்பகுதியில் போக்குவரத்தையும் முறையாக போலீஸார் மாற்றிவிடவில்லை. அதனால், ஆட்சியர் அலுவலகம் அருகே, கே.கே.நகர், தல்லாக்குளம் சாலைகளில் மக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமம் அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT