Published : 25 Mar 2024 04:48 PM
Last Updated : 25 Mar 2024 04:48 PM
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருநெல்வேலி தொகுதியில் ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், விளவங்கோடு இடைத்தேர்தலில் தாரகை கட்பர்ட் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஒரு தொகுதிக்கு 3 பேர் என 9 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கான உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் செல்வப்பெருந்தகை கடந்த மார்ச் 20-ம் தேதி டெல்லி சென்றார். நீண்ட இழுபறிக்கு பிறகு ஒருவழியாக தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதுவும், 9-ல் 7 தொகுதிகளுக்கு மட்டும் தான் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
அதன்படி, திருவள்ளூர் தொகுதிக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரிக்கு முன்னாள் எம்எல்ஏ கே.கோபிநாத், கரூருக்கு ஜோதிமணி, கடலூருக்கு விஷ்ணு பிரசாத், சிவகங்கைக்கு கார்த்தி சிதம்பரம், விருதுநகருக்கு மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரிக்கு விஜய் வசந்த் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 5பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. திருநெல்வேலி, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு அறிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி- ராபர்ட் புரூஸ் போட்டியிடுவார் என்றும், விளவங்கோடு இடைத் தேர்தலில் தாரகை கட்பர்ட் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவுக்கு மயிலாடுதுறை அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
ராபர்ட் புரூஸ்: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ் (62) ஒரு வழக்கறிஞர். திருநெல்வேலி, கன்னியாகுமரியில், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கட்சிப் பதவிகளில் இருந்துள்ளார். 2015-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவராக பொறுப்பு வகித்தவர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலி, நாங்குநேரி பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், திருநெல்வேலி தொகுதிக்கான வேட்பாளர் பெயர் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT