Published : 25 Mar 2024 04:05 PM
Last Updated : 25 Mar 2024 04:05 PM

“திமுகவினரின் டோக்கன் பெயரிலும் பினாமி” - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் @ வட சென்னை சலசலப்பு

சென்னை: "திமுகவினர் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், முண்டியடித்துக்கொண்டு மரபைப் பின்பற்றாமல், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்து அங்கிருந்த இருக்கைகளைப் பிடித்துக் கொண்டனர். ஆளுங்கட்சி தங்களது அதிகாரத்தை முழுமையாக துஷ்பிரயோகம் செய்து தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அழுத்தம் கொடுத்து அவரை பணிய வைக்கப் பார்த்தனர்" என்று வட சென்னை தொகுதி வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 25) சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் வட சென்னை தொகுதியின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தந்தனர். இதனையடுத்து யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "அதிமுக சார்பில் வேட்பாளர் ராயபுரம் மனோ இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், மண்டல அலுவலகங்களில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம், வேட்புமனுத் தாக்கல் செய்ய தங்களுக்கான நேரத்தை ஒதுக்கும்படி கோருவது காலம்காலமாக பின்பற்றப்படும் மரபு. அந்த வகையில், ராயபுரம் மனோ தேர்தல் நடத்தும் அலுவலரைத் தொடர்பு கொண்டபோது, முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்று அதிகாரி கூறியுள்ளார்.

நான் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக முன்கூட்டியே வந்துவிட்டேன். ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள், வேட்பாளர் இல்லாமல் என்னை அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால், நான் 3 நிமிடம் காத்திருந்தேன். பிறகு, வேட்பாளர் வந்தவுடன் அவருடன் சேர்ந்து 5 பேர் சரியான நேரத்தில், தேர்தல் நடத்தும் அலுவலகத்தின் வாயிலில் வருகையை பதிவு செய்தோம். இதற்கான சிசிடிவி காட்சிகளும் உள்ளன. முறைப்படிப் பார்த்தால், முதலில் வந்தது நாங்கள்தான். சரியாக 11.59 மணிக்கு நாங்கள் வந்துவிட்டோம்.

எங்களுக்கு அவர்கள் கொடுத்த டோக்கன் எண் 7. நாங்கள் மேலே சென்றோம். அப்போது அங்கு இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துகொண்டிருந்தனர். அதனால், நாங்கள் காத்திருந்தோம். எங்களது டோக்கன் எண் வந்தபோது, திபுதிபுவென்று திமுகவினர், அதாவது திமுக வேட்பாளர், அவருடன் மண்டலத் தலைவர்கள், ஒரு எம்எல்ஏ, மேயர், இப்படி மொத்தமாக எட்டு, ஒன்பது பேர் உள்ளே வந்தனர். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், முன்டியடித்துக் கொண்டு மரபைப் பின்பற்றாமல், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்து அங்கிருந்த இருக்கைகளைப் பிடித்துக் கொண்டனர்.

எங்களுக்கு இருக்கைக்கூட கொடுக்கவில்லை. அப்போது நாங்கள்தான் 11.59 மணிக்கு எல்லாம் வந்தோம். எனவே, எங்களுடைய வேட்புமனுவைத்தான் வாங்கவேண்டும் என்று கூறினோம். உடனே அவர்களுடைய டோக்கனை காட்டினர். அந்த டோக்கன் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி பெயரில் இல்லை. திமுகவே பினாமி. அவர்களுடைய டோக்கன பெயரிலும் பினாமி. பினாமி யாரையோ அனுப்பி டோக்கன் பெற்றுள்ளனர். இதனால், உள்ளே ஒரு வாக்குவாதம் நடந்தது. காரணம் சட்டத்தை நிலைநாட்ட வேண்டும். தேர்தல் முறைப்படி நடக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் வாதிட்டோம்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர், முதலில் அதிமுகதான் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால், திமுகவினர், அந்த நாற்காலியில் இருந்து எழுந்திருக்கவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலரை மிரட்டும் தொனியில் அமைச்சர், மேயர், மண்டலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மிரட்டினர். ஆனால், அவர் அதிமுகவின் மனுவைத்தான் வாங்குவேன் என்று கூறிவிட்டார். மேலும், தலைமை தேர்தல் அதிகாரியை தொலைபேசியில் தொடர்புகொண்டார். அவரும் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.

ஆனால், திமுகவினர் அதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. திமுகவினர் தேர்தலின் ஆரம்பக்கட்டத்திலேயே சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதிகாரிக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அவர்களுடைய செயல்பாடுகள் அனைத்தும் இங்கு பதிவாகியுள்ளது. ஆளுங்கட்சி தங்களது அதிகாரத்தை முழுமையாக துஷ்பிரயோகம் செய்து தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அழுத்தம் கொடுத்து அவரை பணிய வைக்கப் பார்த்தனர். நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. திமுகவின் டோக்கன் எண் 8, டோக்கன்படி பார்த்தாலும் அவர்கள் எங்களுக்கு பின்னாடிதான்” என்றார் ஜெயக்குமார்.

அதேவேளையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தேர்தல் நெருங்க நெருங்க தோல்வி பயத்தால், அதிமுகவினர் இப்படிப்பட்ட அராஜகங்களை கட்டவிழ்த்துவிடுவார்கள். எதிரிகள் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்தக் கூடும். எனவே, தேர்தலை அமைதியாக சந்திக்க வேண்டும். எங்கும் ஒரு சிறு சலசலப்புக்கு இடமளிக்கக் கூடாது என்ற தமிழக முதல்வரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ற வகையில், அமைதியான முறையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நாங்கள் முறையிட்டோம்” என்றார். அவரது பேட்டியை முழுமையாக வாசிக்க > “தோல்வி பயத்தால் அதிமுகவினர் அராஜகம்” - அமைச்சர் சேகர்பாபு @ வட சென்னை சலசலப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x