Published : 25 Mar 2024 10:28 AM
Last Updated : 25 Mar 2024 10:28 AM

தமிழக காங்கிரஸின் 2 தொகுதி வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி

சென்னை: தமிழகத்தில் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மாநில தேர்தல் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அமைத்துள்ளது.

ஒரு தொகுதிக்கு 3 பேர் என 9 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கான உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் செல்வப்பெருந்தகை கடந்த மார்ச் 20-ம் தேதி டெல்லி சென்றார். நீண்ட இழுபறிக்கு பிறகு ஒருவழியாக தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. அதுவும், 9-ல் 7 தொகுதிகளுக்கு மட்டும் தான் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அதன்படி, திருவள்ளூர் தொகுதிக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரிக்கு முன்னாள் எம்எல்ஏ கே.கோபிநாத், கரூருக்கு ஜோதிமணி, கடலூருக்கு விஷ்ணு பிரசாத், சிவகங்கைக்கு கார்த்தி சிதம்பரம், விருதுநகருக்கு மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரிக்கு விஜய் வசந்த் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 5பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி ஆகியவற்றுக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: திமுக, அதிமுகவில் இந்தமுறை அதிக அளவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் காங்கிரஸில் வாய்ப்பு கொடுக்கப்பட்டவர்களுக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கப்படுகிறது. 1967 முதல் இன்று வரை ஒரே குடும்பத்துக்கு வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது.

வாரிசுகளுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க கூடாது என பலமுறை வலியுறுத்தியும் அகில இந்திய தலைமை அதை கண்டுகொள்ளவே இல்லை. தமிழக கள நிலவரம் அறிவதில் உள்ள குறைபாடு, தமிழக அரசியல், சமூக சூழல் தெரியாத மேலிட பார்வையாளர்களை நியமித்திருப்பது, தமிழக தலைவர்களின் கருத்துகளை அகில இந்திய தலைமை பொருட்படுத்தாதது, ஏதோ ஒரு ஆய்வறிக்கையை நம்புவது போன்ற காரணங்களாலேயே வேட்பாளர்களை காலத்தோடு தேர்வு செய்ய முடியாமல் திணறும் நிலை கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x