Published : 25 Mar 2024 10:13 AM
Last Updated : 25 Mar 2024 10:13 AM
கரூர்: கரூர் மக்களவைத் தொகுதி எம்.பி. செ.ஜோதிமணி. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு அதிமுகவின் தம்பி துரையை 4.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
அதன் பிறகு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் வென்று திமுக ஆட்சி பொறுப் பேற்றதும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் ஜோதி மணிக்கு உரசல் ஏற்பட்டது. தொடர்ந்து, ஆட்சியர் அலுவலர் அலுவலகத்தில் தர்ணா, உள்ளாட்சி தேர்தல் கூட்டணி பங்கீட்டில் திமுக நிர்வாகிகளுடன் மோதல் என அவரது திமுக எதிர்ப்பு தொடர்ந்தது. அதனால், 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என திமுகவினர் உறுதியாக இருந்தனர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியிலும் ஜோதி மணிக்கு எதிர்ப்பு காணப்பட்டது.
மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர், கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட எம்.பி. ஜோதி மணிக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என ரத்த கையெழுத்திட்டு மாநில தலைமைக்கு கடிதம் அனுப்பினர்.
மேலும், ஜோதிமணி தொகுதி பக்கம் வரவில்லை. பொதுமக்களிடம் எதிர்ப்பு உள்ளது. ஆகையால், கரூர் தொகுதி காங்கிரஸுக்கு வழங்கப்படாது. திமுகவுக்கு ஒதுக்கப்படும். ஜோதிமணி திண்டுக்கல்லில் போட்டியிடுகிறார் என்பன போன்ற பல்வேறு தகவல்கள் வந்தன.
ஆனால், திமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், கரூர் தொகுதி காங்கிரஸுக்கே மீண்டும் ஒதுக்கப்படுமா? அப்படியே ஒதுக்கினாலும் ஜோதி மணிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி பரவலாக இருந்தது. மேலும், கரூர் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் பேங்க் சுப்பிரமணியன் மிகுந்த முனைப்பு காட்டினார்.
இந்நிலையில், மார்ச் 18-ல் கரூர் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. மார்ச் 23-ல் வெளியிடப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் கரூர் தொகுதி வேட்பாளராக எம்.பி. செ.ஜோதி மணி மீண்டும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக, உட்கட்சியினர் எதிர்ப்பு,தொகுதி பக்கம் வரவில்லை என மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. எனவே, கரூர் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப் படாது. ஜோதிமணிக்கு வாய்ப்பு கிடைக்காது என கடந்த சில மாதங்களுக்கும் மேலாக தகவல்கள் வந்த நிலையில், சாதாரண குடும்ப பின்னணி, பெண் எனபனவற்றுடன் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோருடன் இருந்த நெருங்கிய தொடர்பு காரணமாகவே ஜோதி மணிக்கு மீண்டும் கரூர் தொகுதி கிடைத்துள்ளது.
பிரியங்கா காந்தி போல ஜோதிமணியும் எனக்கு ஒரு பெண் என சொல்லும் அளவுக்கு சோனியாவிடம் பெற்றிருந்த செல்வாக்காலேயே அனைத்து எதிர்ப்புகளையும் மீறி, கரூர் தொகுதியை மீண்டும் பெற்றுள்ளார் எம்.பி. செ.ஜோதிமணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT