Published : 25 Mar 2024 06:22 AM
Last Updated : 25 Mar 2024 06:22 AM
சென்னை: கரோனா காலத்துக்கு பிறகு, ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று பயணிகள், மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
ரயில் பயணத்தில் 58 வயது நிரம்பிய பெண்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகையும், 60 வயது நிரம்பிய ஆண்களுக்கு 40 சதவீதம் கட்டண சலுகையும் வழங்கப்பட்டு வந்தது. இந்த கட்டண சலுகை கடந்த 2009-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டது. இது, மூத்த குடிமக்களுக்கு பேருதவியாக இருந்தது.
இதற்கிடையில், 2020-ம் ஆண்டு மார்ச்சில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, ரயில் சேவை நிறுத்தப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு, ரயில் சேவை படிப்படியாக தொடங்கியபோது, ரயில்வேயில் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது.
ரயிலில் கட்டண சலுகை ரத்தால், 2020-ம் ஆண்டு முதல் பயணத்தை மூத்த குடிமக்கள் படிப்படியாக தவிர்க்கத் தொடங்கினர். ஆன்மிக தளங்களுக்கு செல்லவும், மருத்துவ சிகிச்சைக்கு சென்று வரவும் மூத்தகுடிமக்களுக்கு இந்த கட்டண சலுகை பேருதவியாக இருப்பதால், இதை மீண்டும் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதற்கு ரயில்வே அமைச்சகம் செவிசாய்க்காமல்,இந்த கட்டண சலுகையால் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.1,667 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படாது என்று திட்டவட்டமாக அறிவித்தது.
இதற்கிடையில், கரோனா பாதிப்புக்கு பிறகு, விரைவு ரயில் கட்டணத்தில் இயக்கப்பட்ட 324 குறுகிய தூர பாசஞ்சர் ரயில்களை மீண்டும் சாதாரண கட்டணத்தில் இயக்க தெற்கு ரயில்வே கடந்த மாதம் இறுதியில் உத்தரவிட்டது. இதேபோல, கரோனா காலத்துக்கு பிறகு, ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று ரயில் பயணிகள், மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து சென்னை கோட்ட ரயில் பயனர்கள் ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினரும், திருவள்ளூர் மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்க செயலாளருமான கே.பாஸ்கர் கூறியதாவது:
விரைவு ரயில் கட்டணத்தில் இயக்கப்பட்ட 324 குறுகிய தூர பாசஞ்சர் ரயில்களை மீண்டும் சாதாரண கட்டணத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.
அதேவேளை, ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்பட வில்லை. மேற்கத்திய நாடுகளில், மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மேலும், மூத்த குடிமக்களை அரசு கவனித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் அத்தகைய முறை இல்லை.
மூத்த குடிமக்களில் பலர், ஓய்வுபெற்று 10 ஆண்டுகள் (70 ஆண்டுகள்) ரயிலில் பயணம் செய்யப் போகிறார்கள். அதன் பிறகு, நீண்ட ரயில் பயணத்துக்கு அவர்களின் உடல்நிலை ஒத்துழைக்காது, 70 வயதுக்கு பிறகு இயற்கையாக பயணம் செய்வது குறையும். எனவே, ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து தட்சிண ரயில்வே பென்ஷனர் சங்கத் தலைவர் இளங்கோவன் கூறியதாவது:
ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் 6 கோடி பேரும், முன்பதிவில்லாத பெட்டிகளில் 6 கோடி பேரும் இந்த சலுகையை பெற்றுவந்தனர். கரோனாவுக்குபிறகு நிறுத்தப்பட்ட இந்த சலுகை தற்போது வரை வழங்கப்பட வில்லை. இதற்காக, ரூ.1,667 கோடி செலவு ஏற்படுவதாக ரயில்வே வாரியம் கூறுகிறது. 12 கோடி மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணத்தில் சலுகை கட்டணம் கொடுக்கக்கூடாதா, மூத்த குடிமக்கள் பெரும்பாலும் மருத்துவ சிகிச்சைக்காகவும், ஆன்மிக சுற்றுலாவுக்காகவும் வெளியூர் சென்று வருகின்றனர். எனவே, இந்த கட்டண சலுகையை பெரிய சுமையாக கருதாமல், மீண்டும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கட்டண சலுகை தொடர்பாக ரயில்வே அமைச்சகம்தான் முடிவு செய்யும் என்றார்.
மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டு தற்போது 4 ஆண்டுகளை தொட்டு உள்ளது. இனியும் தாமதிக்காமல் விரைவாக ரயில் பயண கட்டண சலுகையை மூத்த குடிமக்களுக்கு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT