Published : 25 Mar 2024 06:15 AM
Last Updated : 25 Mar 2024 06:15 AM

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒரு கி.மீ. தொலைவு காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெயிலின் தாக்கத்தால் குடைபிடித்துவாறு கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒரு கிலோமீட்டர் தொலைவு காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் கோயிலில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நாளான நேற்று பங்குனி மாத பவுர்ணமி மற்றும் உத்திர நட்சத்திரம் என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நேற்று காலை கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும்,உத்திர நட்சத்திரம் என்பதால் முருகன் சந்நிதியில் உள்ள மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தேரடி வீதி, பெரிய தெரு மற்றும் வட, தென் ஒத்தவாடை தெரு என சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வெயில் அதிகம் இருந்ததால், குடை பிடித்துக் கொண்டு சில பக்தர்கள் காத்திருந்தனர்.

ஏறத்தாழ 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலுக்கு வெளியே காத்திருந்த பக்தர்கள் சிலர் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். கோயில் உள்ளே குழந்தையுடன் வரும் தாய்மார்கள், முதியோர், கர்ப்பிணி மற்றும் மாற்றுத் திறனாளி பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, “பங்குனி மாத பவுர்ணமி மற்றும் வாரவிடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் வந்துள்ளது. அடுத்த மாதம் சித்ரா பவுர்ணமிக்கு, இதைவிட பலமடங்கு கூட்டம் இருக்கும். எனவே, கோயிலுக்கு வெளியே காத்திருக்கும் பக்தர்களின் தாகத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து பக்தர்களுக்கும் குடிநீர்கிடைப்பதை மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும். சித்திரை மாத வெயில் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், கோயிலுக்கு வெளியே பந்தல் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x