Published : 25 Mar 2024 12:33 AM
Last Updated : 25 Mar 2024 12:33 AM
ஓசூர்: அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தராததால் வரும் மக்களவை தேர்தல் உள்ளிட்ட இனிவரும் எந்த தேர்தல்களிலும் வாக்களிக்காமல் புறக்கணிப்பதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள குந்துக்கோட்டை ஊராட்சி மல்லிகார்ஜூனதுர்கம், ஏணிபண்டை, வீரசெட்டி ஏரி, ஒசஹள்ளி, சொப்புக்குட்டை, குருபரப்பள்ளி, ஆலத்தி, குடிசல்பைல், கொல்லப்பள்ளிபைல் உள்ளிட்ட கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 60 ஆண்டுகளாக குடியிருப்புகள் மற்றும் விவசாயம் செய்து வரும் விளைநிலங்களுக்கு பட்டா வழங்கவில்லை என்றும் அதே போல் சாலை, குடிநீர் உள்ளி்ட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் அரசு அதிகாரிகள் செய்துகொடுக்கவில்லை என்றும், இதனால் வரும் மக்களவை தேர்தல் உள்ளிட்ட இனிவரும் எந்த தேர்தல்களிலும் வாக்களிக்காமல் புறக்கணிப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாக்குகள் கேட்க அரசில்வாதிகளும், அமைதி பேச்சுவார்த்தைக்கு அரசு அதிகாரிகளும் யாரும் வர வேண்டாம் என இன்று அப்பகுதியில் உள்ள கிராமங்கள் ஒன்றிணைந்து குந்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் பேனர் வைத்தும், துண்டு பிரசுரங்கள் வழங்கி கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை தாசில்தார் பரிமேலழகன் மற்றும் போலீஸார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை செய்து, பட்டா மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து ஆட்சியரிடம் தெரிவித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதற்கு கிராம மக்கள் ஆட்சியர் நேரடியாக வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் வரை பேனரை அகற்ற முடியாது என தெரிவித்ததையடுத்து வருவாய்துறையினர் திரும்பி சென்றனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, “எங்கள் கிராமங்களுக்கு போதிய சாலை வசதிகள் இல்லாததால் பேருந்துகள் வருவதில்லை, இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு தினமும் 4 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று வருகின்றனர்.
இதனால் பள்ளிக்குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இடையில் நின்று விடுகின்றனர். அதே போல் 60 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்தும், விவசாயம் செய்து வருகிறோம். இதுவரை பட்டா வழங்காததால்,அரசு மானியம் பெற்று விவசாயம் செய்ய முடியவில்லை. அதே போல் காட்டு பன்றிகள், யானைகளால் விவசாயம் பாதிக்கிறது.
இது போன்று பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் முதல் அமைச்சர்கள் வரை மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கைளும் எடுக்கவில்லை. தங்கள் கிராமத்திற்கு தேர்தல் நேரங்களில் மட்டும் அரசியல் வாதிகள் வந்து ஓட்டு கேட்கின்றனர். அதற்கு பிறகு எட்டி கூட பார்ப்பதில்லை.
இது போன்று ஒவ்வொரு தேர்தல் நேரங்களிலும் அரசியல்வாதிகள் வந்து எங்களை ஏமாற்றிவிட்டு செல்கின்றனர். இதனால் தான் இனி வரும் அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அனைவரும் முடிவு செய்து, பேனர் வைத்து எதிர்ப்பு தெரிவித்தோம், அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை செய்து இன்று ஆட்சியருடன் வந்து ஆய்வு செய்வதாக கூறி சென்றுள்ளனர். அதுவரை பேனர் மற்றும் கருப்புகொடியை அகற்றமாட்டோம் என கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT