Last Updated : 24 Mar, 2024 09:15 PM

1  

Published : 24 Mar 2024 09:15 PM
Last Updated : 24 Mar 2024 09:15 PM

ஓபிஎஸ் போட்டியால் நட்சத்திர தொகுதியான ராமநாதபுரம் களம் எப்படி?

ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்

ராமநாதபுரம்: பாஜக கூட்டணியில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிட உள்ளதால், ராமநாதபுரம் தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.

கடந்த தேர்தலில் வாரணாசியில் வெற்றி பெற்று பிரதமரான மோடி, இந்த தேர்தலில் ராமேசுவரத்தை உள்ளடக்கிய ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என, கடந்த ஓராண்டாக செய்திகள் பரவின. இதை பாஜகவினரும் அவ்வப்போது உறுதிபடுத்திக்கொண்டே இருந்தனர். அதனால், ராமநாதபுரம் தொகுதி விஐபி அந்தஸ்தை எட்டும் நிலையில் இருந்தது.

ராமநாதபுரம் தொகுதி மக்களும் பிரதமர் மோடி போட்டியிட உள்ளார் என்ற ஆர்வத்தில் இருந்தனர். ஆனால், திடீரென பிரதமர் மோடி போட்டியிடவில்லை என்ற செய்தி பரவியது. அதையடுத்து, பாஜக பிரமுகர்கள் தரணி முருகேசன், கருப்பு முருகானந்தம், ஜி.பி.எஸ்.நாகேந்திரன், அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தேவநாதன் போன்றோர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டு, அவரே சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் என்ற செய்தி வெளியானது. இருப்பினும், முன்னாள் முதல்வர் என்பதால், ராமநாதபுரம் தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இத்தொகுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும், அமமுகவினரும் கணிசமாக உள்ளனர். எனவே, ஓபிஎஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என ஓபிஎஸ், டிடிவி ஆதரவாளர்கள், பாஜகவினர் நம்புகிறார்கள்.

ஏற்கெனவே, திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி.யான நவாஸ் கனி மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் விருதுநகர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயபெருமாள் அறிவிக்கப்பட்டுள்ளார். இதில் நவாஸ் கனி மட்டுமே ஊழியர் கூட்டம், வேட்பாளர் அறிமுகக் கூட்டம் என தேர்தல் பணியில் மும்முரமாக உள்ளார்.

மற்ற கட்சிகளில் வேட்பாளர் அறிவிப்பு தாமதமானதால், ஓ.பன்னீர் செல்வம், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்டோர் தேர்தல் பணிகளை இன்னும் தொடங்காமல் உள்ளனர்.

இந்நிலையில், நாளை (மார்ச் 25) தொகுதிக்கு வரும் ஓ.பன்னீர்செல்வம், அன்றைய தினமே வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என, அவரது ஆதரவாளர் தர்மர் எம்.பி. தெரிவித்தார். அதேபோல், அதிமுக வேட்பாளரும் மார்ச் 25-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x