Last Updated : 24 Mar, 2024 09:03 PM

 

Published : 24 Mar 2024 09:03 PM
Last Updated : 24 Mar 2024 09:03 PM

விழுப்புரம் தொகுதியில் மீண்டும் நேருக்கு நேர் மோதும் விசிக - பாமக; சொந்த பலத்தை நம்பும் அதிமுக

விழுப்புரம்: விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் பாமக, விசிக 2-வது முறையாக நேருக்கு நேர் மோதுகிறது. அதிமுக தனது பலத்தை மட்டுமே நம்பி களம் காண்கிறது.

கடந்த 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது, திண்டிவனம் மக்களவைத் தொகுதி விழுப்புரம் மக்களவைத் தொகுதியாக மாறியது.

இந்தத் தொகுதி உருவான பின், 2009-ல் நடந்த முதல் தேர்தலில், அதிமுகவை எதிர்த்து திமுக கூட்டணியில் விசிக போட்டியிட்டது. இதில் அதிமுகவைச் சேர்ந்த ஆனந்தன் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவும், அதிமுகவும் நேருக்கு நேர் மோதியதில் அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், அதிமுக, பாஜக கூட்டணியில் இடம் பெற்ற பாமக சார்பில் வடிவேல் ராவணன் போட்டியிட்டார். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரவிக்குமார் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.

அப்போது ரவிக்குமார் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் விசிக வேட்பாளராகவும், மற்றப் பகுதியில் திமுக வேட்பாளராகவும் அடையாளம் காட்டப்பட்டார். இந்தத் தேர்தல் யுக்தி கடந்த தேர்தலில் அவரை சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது.

தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது-

திமுக கூட்டணியில் விசிகவைச் சேர்ந்த தற்போதைய எம்.பி ரவிக்குமார் மீண்டும் போட்டி யிடுகிறார். அதிமுகவில், கள்ளக்குறிச்சி மாவட்ட மாண வரணி செயலாளர் பாக்கியராஜ் போட்டியிடுகிறார்.

பாஜக கூட்டணியில் இடம்பெற் றுள்ள பாமகவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக முரளி சங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த முறை ரவிக்குமார் எம்.பி உதயசூரியன் சின்னத்தில் நின்றநிலையில், தற்போது தனிச்சின் னமான பானை சின்னத்தில் போட்டி யிடுகிறார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்களிடையே இச்சின்னத்தை கொண்டு செல்ல வேண்டிய கூடுதல் பொறுப்பு இக்கூட்டணிக்கு உள்ளது.

பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முரளி சங்கர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர். இதுவரையில் களப் பணிகள் தொடங்கப்படவில்லை.

அதிமுகவைப் பொறுத்தவரை வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்தி, தொகுதிகளில் இரட்டை இலை சின்னம் வரையும் பணி தேர்தலுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டுள்ளது. இக்கூட்டணியில் தேமுதிகவும் இடம் பெற்றுள்ளது. விஜயகாந்த் மீதான அபிமானம் உள்ள வாக்காளர்கள் இத்தொகுதியில் உள்ளனர். அந்த வாக்குகள் அதிமுக வேட்பாளருக்கு கிடைக்கும்.

விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்காக அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் இருவரும் களமிறங்குகின்றனர். அவர்களுக்குள் தனக்கென ஒதுக்கப்படும் பகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற்று கட்சித்தலைமைக்கு தன் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதனால், ரவிக்குமார் சற்று ரிலாக்ஸாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளலாம்.

மும்முனைப் போட்டி என்று கூறப்பட்டாலும் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக - திமுக கூட்டணியின் விசிக இடையேதான் கடும்போட்டி நிலவும் எனத் தெரிகிறது. சி.வி.சண்முகத்தின் தேர்தல் வியூகமும், அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோரின் தேர்தல் வியூகங்களும் இத்தொகுதியில் போட்டிப் போடும்.

விழுப்புரம் தொகுதியில் யார் வெற்றி பெற்றாலும், கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பதே தற்போதைய நிலவரம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x