Published : 24 Mar 2024 06:37 PM
Last Updated : 24 Mar 2024 06:37 PM
நாமக்கல்: மோகனூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்து வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோகனூர் தாலுகாவுக்கு உட்பட்ட வளையப்பட்டி, புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், 700 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படுவர். தவிர, சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிப்காட் எதிர்ப்பு இயக்கம் ஏற்படுத்தி இப்போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இச்சூழலில் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் சிப்காட் அமைக்கும் திட்டத்தை வாபஸ் பெறக்கோரி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகள் தங்களின் வீடுகளின் முன்பு தேர்தலை புறக்கணிப்பதாக நோட்டீஸ் ஒட்டி வைத்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியுள்ளனர்.
இது குறித்து நாமக்கலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் கூறியாதாவது: "சிப்காட் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏப்.19ம் தேதி நடைபெற உள்ள மக்கவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இதையொட்டி எங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். மாவட்ட ஆட்சியர் எங்களை அழைத்துப் பேசி சிப்காட் திட்டத்தை கைவிடுவதாக உறுதியளித்தால் நாங்கள் தேர்தலில் வாக்களிப்போம்" என்றார்.
இந்த சந்திப்பின்போது, கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ரவீந்திரன், சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள் பழனிவேல், சரவணன், தண்டபாணி, ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT