Published : 24 Mar 2024 06:27 PM
Last Updated : 24 Mar 2024 06:27 PM
சென்னை: 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறுதிகளையும் பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கவுண்டம்பாளையம் தொகுதி ஊழியர் கூட்டம் சத்தி சாலை, சரவணம்பட்டி அருகே அமைந்துள்ள தனியார் வளாகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. அதில், கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அளித்த 295 வாக்குறுதிகளையும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. திமுகவை போல் அல்ல.
கோவைக்கு மோடி என்ன செய்திருக்கிறார் என்பது ஒவ்வொரு சாமானிய மக்களுக்கும் தெரியும். அதை அண்ணாமலை வந்து சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. கோவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசால் செயல்படுத்தப்பட்டவை ஆகும். கமிஷன் வாங்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே முந்தைய ஆட்சியாளர்கள் பாலங்களை கட்டி உள்ளனர்.
கோவை மக்களவைத் தொகுதியை சிறப்பான முறையில் மாற்றிக் காட்ட வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறோம். மத்திய அரசுக்கும் கோவைக்கும் நான் ஹாட் லைனாக செயல்படுவேன். கோவையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்.
யார் என்ன சொல்கின்றனர் என்பதை முழுமையாக எடப்பாடி கேட்பதில்லை. பணம் கொடுக்காமல் கோவையில் ஜெயித்து காட்ட முடியும். தேசிய ஜனநாயக கட்சியின் தொண்டர்கள் தங்களது கை காசை போட்டு கட்சிக்காக செலவழிப்பார்கள். இது தான் மாற்று அரசியல். எடப்பாடி பழனிச்சாமி டீ குடிப்பதற்குக் கூட யாரிடமாவது பணம் வாங்கித் தான் குடிப்பார் போல் தெரிகிறது. அதனால் தான் அதை உதாரணமாக பேசி இருக்கின்றார். நாங்கள் டீ குடிப்பது என்றாலும் சொந்தக் காசில் டீ குடிப்போம். இது தான் எங்களுக்கும் எங்கள் தலைவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்.
உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கல்லை கையில் எடுத்துக் கொண்டு செல்லும் அளவிற்கு தான் அவரது அறிவு இருக்கிறது. அரசியலில் பக்குவப்படாதவர். பண பலத்தை வைத்து அண்ணாமலையை ஜெயிக்க பார்க்கின்றனர். இதற்காக திமுக அதிமுக வேட்பாளர்கள் இணைந்து கூட செயல்படுவார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய அரசின் திட்டங்களுக்கு கமிஷன் பெற்று செயல்பட்டுள்ளனர்.
இத்தகைய ஆக்கபூர்வமற்ற செயல்களால் கோவை நகரம் சூடானது தான் மிச்சம். கோவை நகரில் ஆரோக்கியமான சாலைகள் இல்லை. சிறப்பான பூங்காக்கள் இல்லை. கோவை சார்ந்த தேர்தல் அறிக்கை ஏப்ரல் இரண்டாவது வாரம் வெளியிடப்படும்.
ரஷ்யாவின் ஸ்டாலினுக்கும், இங்கிருக்கும் ஸ்டாலினுக்கும் எந்தவித மாறுபாடும் கிடையாது. ஜனநாயகத்தைப் பற்றி பேச ஒரு தலைவருக்கு உரிமை இல்லை என்றால் அது ஸ்டாலின் மட்டுமே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT