Published : 24 Mar 2024 05:42 PM
Last Updated : 24 Mar 2024 05:42 PM
மதுரை: மீண்டும் மோடி பிரதமராக வரக்கூடாது, அவரை தோற்கடிக்கவேண்டும் என மதுரையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சசிக்குமார் என்பவரின் இல்ல திருமண நிகழ்ச்சி மதுரை தெப்பக் குளம் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களில் நயினார் நாகேந்திரன் கட்டாயம் வெற்றி பெறுவார். கோவையில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெற்றி பெறுவது பற்றி தெரியாது. தமிழகத்தில் திமுக, பாஜக என, களம் மாறி உள்ளதா என்றால், கனவு எல்லோருக்கும் இருக்கிறது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வேட்பாளர்களை எல்லா இடத்திலும் நிறுத்தலாம். அமைப்பு வலுவாக இருக்கிறதா என்பதை பார்க்கவேண்டும். பணத்தை கொடுத்து விளம்பரம் செய்தால் மட்டும் போதாது. மக்கள் நம்ப வேண்டும். சீனா, இந்தியாவை ஆக்கிரமிப்பு செய்ததை பிரதமர் மோடி தடுக்கவில்லை.பொருளாதார ரீதியாக பின் தங்கி உள்ளோம். மாலத்தீவுடன் பிரச்சினை உள்ளது. மோடி ஒன்றும் செய்யவில்லை.
பாஜகவில் ஆளுநர் கூட ராஜினாமா செய்துவிட்டு வேட்பாளராக களம் இறங்கியுள்ளது குறித்து கேட்கிறீர்கள். அது எனது தலைவலி இல்லை. நான் எல்லாவற்றையும் பையில் வைத்துக்கொண்டு சென்றுவிடுவேன் என நினைப்பதால் மோடி என்னை முடிந்தமட்டும் தூரமாக வைத்துள்ளார். பாஜக கேட்டால் பிரச்சாரத்திற்கு செல்வேன். ஆனால் என்னிடம் கேட்கவில்லை. திமுக கட்சியில் எத்தனை பைத்தியகாரர்கள் உள்ளனர். ராஜீவ் காந்தி என்ற நபர் பிராமணர்களை படுகொலை செய்வோம் என, பேசியுள்ளார்.
நான் திமுக ஆட்சியை கவிழ்த்தவன். அதுவும் 2 முறை கவிழ்த்தவன். தற்போது கவிழ்க்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. மோடி பிரதமராக மீண்டும் வரக்கூடாது. அவரை தோற்கடிக்கவேண்டும். மதுரை எய்ம்ஸ் பற்றி அமைச்சர் உதயநிதி செங்கலை தூக்குவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT