Published : 24 Mar 2024 02:56 PM
Last Updated : 24 Mar 2024 02:56 PM
சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சியில் கடந்த மார்ச் 22-ம் தேதி திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘தன்னுடைய ஆட்சி முடியப் போகிறது என பிரதமர் மோடிக்கு தூக்கம் வரவில்லை. தோல்வி பயம் பிரதமரின் மோடியின் முகத்திலும், கண்களிலும் நன்றாகத் தெரிகிறது’ என்று கூறினார்.
இந்திய வரலாற்றில், ஏன் உலக வரலாற்றிலேயே பிரதமர் மோடி அளவுக்கு மக்கள் ஆதரவைப் பெற்ற தலைவர்கள் யாரும் இருக்க முடியாது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனையை மோடி படைக்க உள்ளார். தோல்வி பயம் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட 'இண்டியா' கூட்டணி தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் யார் தங்களுக்கு உதவியது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
21 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் திமுக தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 1,000 கோடி வரை நிதி பெற்றுள்ளது. அதுவும் லாட்டரி விற்கும் ஒரு நிறுவனத்திடம் இருந்து ரூ. 500 கோடி பெற்றுள்ளது. ஆனால், 450-க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிடும் பாஜக நிதி பெற்றது பற்றி முதல்வர் திருச்சி கூட்டத்தில் குறை கூறியிருக்கிறார்.
தேர்தலில் கருப்பு பணம் புழங்குவதை தவிர்க்கவே, தேர்தல் பத்திர திட்டத்தை பாஜக கொண்டு வந்தது. முறைப்படி வங்கிகள் மூலம் நிதி பெற்றால் அதையும் குறை கூறுகின்றனர். சி.ஏ.ஜி., அறிக்கையை சுட்டிக்காட்டி பாஜக ஆட்சியில் ரூ. 7 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் மீண்டும் பேசியிருக்கிறார்.
அவர் கூறுவது உண்மையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரட்டும். ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக, அவர்களின் பண்டிகைகளுக்கு கூட வாழ்த்துச் சொல்ல முடியாத அளவுக்கு வெறுப்பை கக்கும் ஒருவர், பாஜகவை நோக்கி பாசிச கட்சி என்கிறார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT