Published : 24 Mar 2024 04:02 AM
Last Updated : 24 Mar 2024 04:02 AM
வேலூர்: மக்களவைத் தேர்தலில் மத்தியில் இழுபறியான நிலை வந்தால் பாஜகவுக்கு முதலாவதாக திமுக தான் ஆதரவு அளிக்கும் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதி அறிமுகக் கூட்டம் வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, ‘‘கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது பிரசாந்த் கிஷோர் எனும் தேர்தல் வியூக நிபுணர் வகுத்து கொடுத்த திட்டப்படி ஏராளமான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த திமுக, பின்னர் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மக்களவைத் தேர்தலையொட்டி தற்போது மீண்டும் ஏராளமான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்ற முயல்கின்றனர். ஆனால், மக்கள் தெளிவாக உள்ளனர்.
அவர்கள், இம்முறை அதிமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறுபான்மையினர் நலனுக்காக பாடுபடக் கூடிய கட்சி அதிமுக மட்டும் தான். தமிழகம் முழுவதும் வஃக்பு வாரியத்துக்கு சொந்தமான சுமார் 4,500 இடங்களில் சுமார் 2,500 இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. கடந்த தேர்தலின் போது வஃக்பு வாரியத்துக்கு சொந்தமான பள்ளிவாசல், ஈத்கா, தர்காவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இஸ்லாமியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை எதுவும் செய்ய வில்லை. சிறுபான்மையினரை ஏமாற்றி வாக்கை மட்டுமே பெற்றுக் கொண்டனர்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்த புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்த முறை பாஜக அணியில் போட்டியிடுகிறார். அவர், கடந்த தேர்தலில் அதிமுக துரோகம் செய்துவிட்டதாக கூறுகிறார். கடந்த முறை அவர் வெற்றி பெற வேண்டும் என கடுமையாக உழைத்தவர்கள்தான் அதிமுகவினர். ஆனால், வாக்குப் பதிவு நாளில் பாஜக காஷ்மீர் சிறப்பு சட்டத்தை மக்களவையில் ரத்து செய்ததே ஏ.சி.சண்முகம் தோல்வியை தழுவ நேரிட்டது. தற்போது, நன்றியை மறந்து அதிமுக முதுகில் குத்திவிட்டதாக கூறுகிறார். அவருக்கு, முதுகில் குத்துவதை இப்போது நாங்கள் காட்டப்போகிறோம். சமுதாயத்தை வைத்து வாக்கு வாங்கலாம் என அவர் நினைக்கிறார். நிச்சயமாக இந்த தேர்தலில் அவரது வேஷம் களையும்’’ என்றார்.
முன்னதாக, வேலூர் புறநகர் மாவட்டச் செயலாளர் வேலழகன் பேசும்போது, ‘‘வேலூர் மக்களவைத் தொகுதியில் 3.30 லட்சம் சிறுபான்மையினர் வாக்கு கள் உள்ளன. இதில், 2.70 லட்சம் வாக்குகள் பதிவாகும். இந்த வாக்குகளில் 1.70 லட்சம் வாக்கு களை நாம் வாங்க வேண்டும். எம்ஜிஆரால் எம்.பி., எம்எல்ஏ-ஆக ஆன ஏ.சி.சண்முகம், நம்மை பார்த்து துரோகி என்கிறார். அவர் தான் துரோகி’’ என்றார்.
வேலூர் மாநகர மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.கே.அப்பு பேசும்போது, ‘‘வேலூர் எம்எல்ஏ கார்த்தி கேயன் மீது சிறுபான்மையினர் அதிருப்தியில் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகள் கழித்து ஏ.சி. பேருந்தில் வரும் ஏ.சி.சண்முகமும், காட்பாடியில் அப்பாவும், மகனும் அழுது வாக்கு கேட்டாலும் யாரும் ஓட்டு போட மாட்டார்கள்’’ என்றார்.
நிகழ்ச்சியில், அதிமுக மாநில அமைப்பு செயலாளர் வி.ராமு, மாவட்டப் பொருளாளர் எம்.மூர்த்தி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்கள் சந்திப் பில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறும்போது, ‘‘ஆளும் திமுக அரசின் அவலங்களை மக்கள் உணர்ந்துள்ளனர். அதை எல்லாம் வைத்து நாங்கள் வேட்பாளரை நிறுத்தி வாக்கு சேகரிக்கிறோம். அமைச்சர் துரை முருகன் இனியும் அழுது பிரச்சாரம் செய்ய முடியாது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் அவரது மகன் வெற்றி பெற்றுள்ளார். பாஜக, அதிமுக தவறான உறவு என முதல்வர் கூறியிருக்கிறார். அது யார் என்று நீங்கள் பொருந்திருந்து பார்க்கத்தான் போகிறீர்கள்.
கடந்த காலங்களில் அமைச்சர் பதவி கொடுக்கிறார்கள் என்பதற் காக தமிழ்நாட்டுக்கு பாஜகவை கொண்டுவந்து விட்டதே திமுக தான். இந்த தேர்தலில் மத்தியில் ஆட்சி இழுபறியானால் முதல் ஆதரவு கொடுப்பது பாஜகவுக்கு திமுகவாகத்தான் இருக்கும். அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியதை நான் கடுமை யாக சொல்ல முடியாது.
பாஜக கூட்டணிக்கு சென்ற தற்கு பாமக தொண்டர்கள் விரும்ப வில்லை. அவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதால் பேச விரும்பவில்லை. அண்ணா கட்சி தொடங்கியபோது வாரிசு அரசியல் கூடாது என்றார். ஆனால், இன்று கட்சியும், ஆட்சியும் வாரிசு கைகளில் போய் விட்டது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT