Published : 24 Mar 2024 01:24 AM
Last Updated : 24 Mar 2024 01:24 AM
தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு வழங்கும் மாத்திரைகளை குறிப்புகளுடன் கூடிய உறைகளில் இட்டு வழங்கும் நடைமுறை வரவேற்பை பெற்றுள்ளது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது மருத்துவம், கண் சிகிச்சை பிரிவு, பல் சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் பிரிவு, எலும்பு மருத்துவம், குழந்தைகள் நலன், தோல் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் இயங்கி வருகின்றன. இங்கு, தருமபுரி மாவட்டம் மட்டுமன்றி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இருந்தும் தினமும் சிகிச்சை பெற ஏராளமானவர்கள் புற நோயாளிகளாக வந்து செல்கின்றனர்.
இவ்வாறு வருபவர்களில் கிராமப் புறங்களைச் சேர்ந்த ஏழை, எளியவர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் உள்ளிட்டோரும் அடங்குவர். இவ்வாறு சிகிச்சைக்கு வருவோர், மருத்துவர்களை சந்தித்து உரிய ஆலோசனைகளைப் பெற்ற பின்னர் மாத்திரை, மருந்துகளை வாங்கிச் செல்கின்றனர். மாத்திரை, மருந்துகள் வாங்கும் இடத்தில் நிறைய கவுன்டர்கள் இருந்தபோதும் வாரத்தின் சில நாட்களில் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.
இந்த சூழலில் மருந்து, மாத்திரைகளை வழங்கும் பணியாளர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற முறை குறித்து அவசர கதியில் விளக்கிவிட்டு அடுத்தடுத்த நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கும் பணியை மேற்கொள்வர். இயந்திர மயமாக நகரும் இந்த சூழல், மருந்து உண்ணும் முறையில் யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டாலும் கூட அதுபற்றி மீண்டும் கேட்டு தெரிந்து கொள்ள இடமளிக்காது. இது, மருத்துவர்கள் பரிந்துரைத்த முறைகளின்படி மருந்துகளை நோயாளிகள் உண்ண முடியாத சூழலுக்கும் வழிவகுத்து வந்தது.
எனவே, தனியார் மருத்துவமனைகளில் வழங்குவது போன்று குறிப்புகளுடன் கூடிய உறைகளில் மருந்து, மாத்திரைகளை இட்டு வழங்க வேண்டும் அல்லது கூடுதல் கவுன்டர்கள் ஏற்படுத்தி நோயாளிகளுக்கு போதிய விளக்கம் அளித்து மருந்துகளை வழங்க வேண்டும் என ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழியாக சமூக ஆர்வலர்கள் ஏற்கெனவே கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம், உறைகளில் இட்டு மாத்திரைகளை வழங்கும் பணியை அண்மையில் தொடங்கியுள்ளது. இந்த நடைமுறைக்கு நோயாளிகளிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள்ளிருப்பு மருத்துவர் நாகவேந்தனிடம் கேட்டபோது, ‘நோயாளிகளின் எதிர்பார்ப்பை அறிந்து மருத்துவமனை நிர்வாகம் மூலம் புறநோயாளிகளுக்கு தற்போது குறிப்புகளுடன் கூடிய உறைகளில் மாத்திரைகள் இட்டு வழங்கப்பட்டு வருகிறது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் திட்டமிட்டு உரிய ஏற்பாடுகளை செய்து இந்த நடைமுறையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்.
ஒரு மாதத்துக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள இந்த நடைமுறை நோயாளிகளின் எதிர்பார்ப்பை நிறைவேறியுள்ளது. உறைகளில் இடப்பட்ட மாத்திரைகளை பெற்ற பிறகும் யாருக்கேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் தெளிவு பெற்றுச் செல்லும் வகையில் மாத்திரைகள் வழங்கும் கவுன்ட்டர்கள் அருகிலேயே 'May I Help You' (நாங்கள் உங்களுக்கு உதவலாமா?) என்ற கவுன்ட்டரும் அமைக்கப்பட்டு சேவை வழங்கப்பட்டு வருகிறது’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT