Last Updated : 24 Mar, 2024 01:16 AM

 

Published : 24 Mar 2024 01:16 AM
Last Updated : 24 Mar 2024 01:16 AM

அரசு நிர்வாகம் சுறுசுறுப்பு; அரசியல் கட்சிகள் சுணக்கம்: களைகட்டாத நெல்லை தேர்தல் களம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவை தொகுதியில் தேர்தல் பணிகளில் அரசுத்துறை நிர்வாகங்கள் சுறுசுறுப்புடன் ஈடுபட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினரினடையே சுணக்கம் காணப்படுகிறது. இதனால் தேர்தல் களம் களைகட்டவில்லை.

திருநெல்வேலியில் மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான கா.ப. கார்த்திகேயன் தலைமையிலான அரசு அதிகாரிகள் குழுவினர் முடுக்கிவிட்டுள்ளனர். 100 சதவிகித வாக்குப்பதிவு என்ற இலக்கை எட்டுவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

வாக்குச் சாவடிகளுக்கு வரமுடியாத நிலையிலுள்ள மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்களிப்பதற்கான படிவங்களை விநியோகிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி வாரியாக கணினி முறையில் ஒதுக்கீடு செய்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனுப்பும் பணிகளும் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியிலும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்களை பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் 3 நாட்களாக காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 3 மணிவரை காத்திருந்த நிலையில் இதுவரை ஒரே ஒருவர் மட்டுமே சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

மனு தாக்கலுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையே போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியிருக்கிறார்கள். மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பை நடத்தி, மக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு மாவட்டத்திலுள்ள அரசுத்துறைகளும், காவல்துறையும் முழுவீச்சில் தேர்தல் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தேர்தலில் களமிறங்கவுள்ள கட்சிகள் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் இன்னும் ஈடுபடவில்லை.

திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், அதிமுக சார்பில் ஜான்சி ராணி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திருநெல்வேலி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை வரையில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திருநெல்வேலியில் நாளை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பாகவேனும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் அந்த கூட்டணி கட்சியினரிடையே எழுந்துள்ளது. இத்தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கியதால், இங்கு போட்டியிட காய்களை நகர்த்திய திமுக நிர்வாகிகள் பலரும் தேர்தல் பணிகளில் சோர்வடைந்துள்ளதாக தெரிகிறது.

தேர்தல் தேதி நெருங்கும் வேளையில் இது எப்படியிருக்கும் என்பது தெரியவில்லை. அதேநேரத்தில் கட்சி தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தற்போது அவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இத்தொகுதியில் அதிமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுவார் என்று கட்சி தலைமை முதலில் அறிவித்திருந்தது. அவர் வெளியூர்க்காரர் என்பதால் இங்கு போட்டியிட வாய்ப்பு கேட்டு காத்திருந்த அதிமுக நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்திருந்தனர். இதனால் அதிமுகவின் தேர்தல் பணிகளில் இன்னும் வேகம் காணப்படவில்லை.

இந்நிலையில் வெளியூர் வேட்பாளருக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து நேற்று மாலையில் புதிய வேட்பாளராக ஜான்சி ராணியை கட்சி அறிவித்தது. வேட்பாளர் தேர்வு குழப்பங்களால் திருநெல்வேலியில் நேற்று நடைபெறுவதாக முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த அதிமுக ஆலோசனை கூட்டம் திடீரென்று ஒத்திவைக்கப்பட்டது. அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்புவரை ஆங்காங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தாமரைக்கு வாக்கு சேகரித்து வந்த நயினார் நாகேந்திரனும் தீவிர வாக்கு சேகரிப்பை தொடங்கவில்லை.

ஒருபுறம் அரசுத்துறை நிர்வாகங்கள் தேர்தல் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருக்கும் நிலையில் மறுபுறம் கட்சியினர் ஆர்வம் காட்டாமல் இருப்பது தேர்தல் திருவிழாவை களைகட்ட வைக்கவில்லை. அடுத்த வாரத்தில் வேட்புமனு தாக்கலுக்குப்பின் பிரச்சார களம் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இணையாக சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x