Last Updated : 23 Mar, 2024 10:03 PM

1  

Published : 23 Mar 2024 10:03 PM
Last Updated : 23 Mar 2024 10:03 PM

“பாஜகவுடன் பேரம் பேசி கூட்டணி அமைத்த பாமக” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

மேட்டூர்: “பாமக வெவ்வேறு இடங்களுக்கு சென்றுதான் வருகிறது. காலையில் அதிமுக கட்சியுடனும், மாலையில் பாஜக கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. இது கொள்கை கூட்டணி அல்ல. பேரம் பேசி கூட்டணி அமைத்துக் கொள்கிறார்கள்” என வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேட்டூர்‌ அடுத்த நவப்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் தருமபுரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகம் கூட்டம் இன்று மாலை நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி தலைமை தாங்கினார். இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு வேட்பாளர் மணியை அறிமுகப்படுத்தி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பழனியப்பன் (தருமபுரி மேற்கு) தடங்கம் சுப்ரமணி (தருமபுரி கிழக்கு), மேட்டூர் தொகுதி பொறுப்பாளர் ஆறுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, கொமதேக, விசிக, தவாக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியது: “முதல்வர் செய்த சாதனையால் வெற்றி பிரகாசமாக உள்ளது.

கடந்த முறை வாக்கு சேகரிக்கும்போது பெண்களின் ஆதரவு குறைவாக இருந்தது. தற்போது, எங்களுக்கு பெண்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. கூட்டுறவு கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, இலவச பேருந்து என 3 ஆண்டு காலத்தில் முதல்வர் செய்த சாதனைகள். சாதனைகள் எதுவும் இல்லாத போதே 40 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். தற்போது சாதனைகள் செய்திருப்பதால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அனைத்து வேட்பாளர்களும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்.

ஆட்சியில் இல்லாத போதும், ஆட்சிக்கு வந்தபோதும், ஆட்சியில் இருக்கும் போதும் ஒரே கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். இதுவே ஒரு கின்னஸ் சாதனையாகும். கொள்கை கூட்டணி என்றால் திமுகதான்.

கூட்டணியே மதிக்கின்ற முதல்வராக எங்கள் தலைவர் இருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி வெவ்வேறு இடங்களுக்கு சென்று தான் வருகிறது. காலையில் அதிமுக கட்சியுடனும், மாலையில் பாஜக கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. இது கொள்கை கூட்டணி அல்ல. பேரம் பேசி கூட்டணி அமைத்துக் கொள்கிறார்கள். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பேரத்தை முன்வைத்துதான் கூட்டணி நடக்கிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x