Last Updated : 23 Mar, 2024 07:12 PM

1  

Published : 23 Mar 2024 07:12 PM
Last Updated : 23 Mar 2024 07:12 PM

சிம்லா முத்துச்சோழனுக்கு பதில் ஜான்சி ராணி: நெல்லை அதிமுக வேட்பாளர் மாற்றம் ஏன்?

நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி

திருநெல்வேலி: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளரை கட்சித் தலைமை திடீரென்று மாற்றியுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக திசையன்விளை பேரூராட்சி தலைவர் மு. ஜான்சி ராணி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி சனிக்கிழமை மாலையில் அறிவித்தார்.

புதிய வேட்பாளர் ஜான்சி ராணி: அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி (42) திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மன்னராஜா கோயில் தெருவை சேர்ந்தவர். பி.ஏ.பட்டதாரி. இந்து நாடார் சமூகத்தை சேர்ந்தவர். 2005-ஆம் ஆண்டிலிருந்து அதிமுகவில் பணியாற்றி வருகிறார். 2006 முதல் 2016 வரை திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலராகவும், 2012 முதல் 2017 வரை திசையன்விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநராகவும் இருந்துள்ளார்.

2012 முதல் திசையன்விளை நகர மகளிரணி செயலாளராகவும், 2021 முதல் திருநெல்வேலி மாவட்ட மகளிரணி செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். 2022 முதல் திசையன்விளை பேரூராட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும், இந்த ஆண்டு முதல் திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக இணை செயலாளராகவும் உள்ளார். இவரது கணவர் பெயர் பி.முருகானந்தம்.

வேட்பாளர் மாற்றம் ஏன்? - முன்னதாக, திருநெல்வேலி தொகுதிக்கு வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் மாற்றப்பட்டு புதிய வேட்பாளராக ஜான்சி ராணி அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதிமுகவினர் பெரிதும் மதிக்கும் ஜெயலலிதாவையே எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது அக்கட்சி விசுவாசிகளிடம் முணுமுணுப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், திமுகவிலிருந்து விலகி சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தவருக்கு திடீரென்று வாய்ப்பு வழங்கியது கட்சியில் பல ஆண்டுகளாக விசுவாசிகளாக இருப்போரை ஏமாற்றம் அடைய வைத்திருந்தது. உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் சென்னையில் வசிப்பவருக்கு ஏன் இந்த வாய்ப்பைக் கட்சியி வழங்கியது என்ற கேள்வியும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அதிமுக தரப்பிலிருந்து எழும்பியது.

சிம்லா முத்துச்சோழன் வெளியூர்காரர் என்பதால் வாக்குச் சேகரிப்பின் போது திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் இருந்து ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது என்பதெல்லாம் கட்சித் தலைமைக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஏற்கெனவே அறிவித்த வேட்பாளர் மாற்றப்பட்டதாக தெரிகிறது.

யார் இந்த சிம்லா முத்துச்சோழன்? - திமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் இரண்டாவது மருமகள் சிம்லா முத்துச்சோழன் (35). கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்விகமாகக் கொண்ட இவர், பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். வழக்கறிஞர் தொழில் செய்து வரும் சிம்லா, கிட்டத்தட்ட 20 வருடங்களாக திமுகவில் பணியாற்றி வந்தார்.

முதலில் வடசென்னை மகளிர் வழக்கறிஞர் அணியில் அமைப்பாளராக இருந்தார். பின்னர் மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளராக பொறுப்பு வகித்தார். அப்போது தான், 2016 சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் களமிறக்கப்பட்டார் சிம்லா முத்துச்சோழன்.

அந்தத் தேர்தலில் தோல்வியை தழுவினாலும், தொடர்ந்து திமுகவில் பயணித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவில் அங்கீகாரம் இல்லை என்று குற்றம்சாட்டி அதிமுகவில் இணைந்தார். இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சிம்லா முத்துச்சோழனுக்கு நெல்லை தொகுதியில் சீட் வழங்குவதாக அறிவித்தது. ஆனால், தற்போது சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக திசையன்விளை பேரூராட்சி மன்றத் தலைவராக இருக்கும் ஜான்சி ராணியை புதிய வேட்பாளராக அறிவித்துள்ளது அதிமுக தலைமை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x