Published : 23 Mar 2024 04:21 PM
Last Updated : 23 Mar 2024 04:21 PM
கோவை: "கோயம்புத்தூர் வளர்ச்சிக்காக பேச நான் தயார். அண்ணாமலை தயாரா...? தயார் என்றால் நேரம், நாள், இடம் குறியுங்கள். வருகிறேன்" என்று கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் சவால் விடுத்துள்ளார்.
கோவையில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகk கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்த நிகழ்வில்பேசிய கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், சக வேட்பாளரான பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு சவால் விடுத்தார்.
அவர் பேசுகையில், “அண்ணாமலைக்கு ஒரு சவால். கோயம்புத்தூரில் இல்லை எங்கு வேண்டுமானாலும் மேடை போடுங்கள். என்ன மொழியில் வேண்டுமானாலும் பேசலாம். எத்தனை பேரை வேண்டுமானாலும் கூப்பிடுங்கள். கோயம்புத்தூர் வளர்ச்சிக்காக பேச நான் தயார். அண்ணாமலை தயாரா..? தயார் என்றால் நேரம், நாள், இடம் குறியுங்கள். வருகிறேன்.
அண்ணாமலை கடந்த ஒரு வருடமாக ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக தலைவர்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார். அதிமுக தொண்டர்கள் உணர்வுகளை புண்படுத்திவிட்டு அதிமுகவின் கோட்டையிலே வந்துநின்றால் வெற்றி பெற விட்டுவிடுவமோ? அண்ணாமலை, ஐ அம் வெயிட்டிங் ஃபார் யூ" என்று சவால் விடுத்து பேசினார்.
முன்னதாக, இதே கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "கோவையில் அதிமுகவுக்கு போட்டி பாஜக கிடையாது. பாஜக மூன்றாமிடம்தான். அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார். அவருக்கு சொந்த ஊர் கரூர். அண்ணாமலை ஏன் கரூரில் போட்டியிடாமல் கோவையில் போட்டியிடுகிறார்? பாஜகவுக்கு 4 சதவிகிதம் தான் வாக்குகள் இருக்கிறது. பாஜக கூட்டணியில் இருக்கிற எந்தக் கட்சிக்கு கோவையில் வாக்கு வங்கி இருக்கிறது?
பாஜக சொல்வது போல் அவர்கள் வளர்ந்துவிட்டதாகவே வைத்துக்கொள்வோம். ஒரு பத்து சதவிகிதம் வாக்கு வங்கிக்கு வளர்ந்திருப்பார்களா? அந்த பத்து சதவிகித்தை வைத்து வெற்றிபெற்றுவிட முடியுமா? அதிமுக 34 சதவிகிதம் வாக்கு வங்கி வைத்துள்ள பெரிய கட்சி. நமக்கு பிறகு தான் திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் எல்லாம். இதுதான் தேர்தல் கணக்கு. இதுதான் தேர்தல் களம். அதைவிடுத்து வாட்ஸ்அப் போன்ற சோஷியல் மீடியாவில் சொல்வது எல்லாம் பெரிய விஷயம் கிடையாது. திமுக - அதிமுகவுக்கே நேரடி போட்டி" என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT