Published : 23 Mar 2024 02:57 PM
Last Updated : 23 Mar 2024 02:57 PM

“கரூரில் இல்லாமல் கோவையில் அண்ணாமலை போட்டி ஏன்?” - எஸ்.பி.வேலுமணி கேள்வி

கோவை: “அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார். அவருக்கு சொந்த ஊர் கரூர். அண்ணாமலை ஏன் கரூரில் போட்டியிடாமல் கோவையில் போட்டியிடுகிறார்?” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்த நிகழ்வில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "அதிமுக வேட்பாளர்கள் மூவரும் நாடாளுமன்றத்துக்கு செல்வது உறுதி. களத்தில் இருக்கக்கூடிய மற்ற வேட்பாளர்கள் எல்லாம் நமக்கு தூசு. பக்கத்தில் கூட அவர்கள் வரமுடியாது.

சும்மா சோஷியல் மீடியாவில் பெரிய ஆளாக காண்பித்தால் எல்லாம் வேலைக்கு ஆகாது. நீலகிரியில் நிற்பவர்கள் எல்லாம் பெரிய ஜாம்பவான்கள்தான். ஆனால், அதிமுக வேட்பாளர் சாதாரணமானவர்தான். எனினும் அவருக்கே வெற்றி கிடைக்கும். கோவையில் அதிமுகவுக்கு போட்டி பாஜக கிடையாது. பாஜக மூன்றாமிடம்தான். கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அதிமுகவால் அடையாளம் காட்டப்பட்டவர். அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டு திமுகவுக்கு சென்றிருக்கிறார்.

திமுகவுக்கு கோயம்புத்தூரில் வேறு ஆள் இல்லை போல. வேட்பாளர் ஆகிற தகுதி கோவை திமுகவில் யாருக்கும் இல்லை போல. இவர்கள் எல்லாம் கொள்கை, விசுவாசம் இல்லாதவர்கள். கோவையில் திமுக - அதிமுகவுக்கே போட்டி. அதிலும், திமுகவில் வேட்பாளர் பெரிய விஷயம் இல்லை.

அடுத்தாவதாக அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார். அவருக்கு சொந்த ஊர் கரூர். அண்ணாமலை ஏன் கரூரில் போட்டியிடாமல் கோவையில் போட்டியிடுகிறார்? பாஜகவுக்கு 4 சதவிகிதம் தான் வாக்குகள் இருக்கிறது. பாஜக கூட்டணியில் இருக்கிற எந்தக் கட்சிக்கு கோவையில் வாக்கு வங்கி இருக்கிறது?

பாஜக சொல்வது போல் அவர்கள் வளர்ந்துவிட்டதாகவே வைத்துக்கொள்வோம். ஒரு பத்து சதவிகிதம் வாக்கு வங்கிக்கு வளர்ந்திருப்பார்களா? அந்த பத்து சதவிகித்தை வைத்து வெற்றிபெற்றுவிட முடியுமா? அதிமுக 34 சதவிகிதம் வாக்கு வங்கி வைத்துள்ள பெரிய கட்சி. நமக்கு பிறகு தான் திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் எல்லாம். இதுதான் தேர்தல் கணக்கு. இதுதான் தேர்தல் களம். அதைவிடுத்து வாட்ஸ்அப் போன்ற சோஷியல் மீடியாவில் சொல்வது எல்லாம் பெரிய விஷயம் கிடையாது. திமுக - அதிமுகவுக்கே நேரடி போட்டி.

அதிமுக எப்போதும் கூட்டணி தர்மத்தை பாதுகாக்கும். அதிமுகவுடன் கூட்டணி வைத்துதான் மற்ற கட்சிகள் தமிழகத்தில் வளர்ந்தன. பாமக, மதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு தமிழகத்தில் அங்கீகாரம் கொடுத்தது அதிமுகதான்" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x