Published : 23 Mar 2024 03:29 PM
Last Updated : 23 Mar 2024 03:29 PM
பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியானது. அதில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், மாலையில் தருமபுரி தொகுதி வேட்பாளர் அரசாங்கம் மாற்றப்பட்டு, அந்தத் தொகுதியில் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது. அதன்பின்னர், பின் இரவில் காஞ்சிபுரம் தனித் தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டது. தருமபுரி தொகுதியில் வேட்பாளர் மாற்றப்பட்டதன் பின்னணி என்ன?
சவுமியாவைக் களமிறக்க திட்டமிட்டது ஏன்? - கடந்த சில ஆண்டுகளாகவே சவுமியா அன்புமணி, பாஜக சித்தாந்தங்களுடன் இணக்கமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கைக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்திருந்தார் சவுமியா அன்புமணி. இதனால், பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிக ஆர்வத்துடன் இருந்தவர் சவுமியாதான். மேலும், தேர்தலில் போட்டியிடுவதிலும் அவருக்கு ஆர்வம் இருந்ததாக சொல்லப்பட்டது. அதனால், அவருடைய முழு சம்மதத்துடன் தான் இந்த அறிவிப்பு வெளியானது என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
ராஜ்ய சபா சீட் பிளான்! - தேர்தலில் களமிறங்காமல் ராஜ்ய சபா சீட் பெறுவதுதான் அன்புமணியின் டார்கெட். அதனால்தான் அதிமுக, பாஜகவிடம் மாநிலங்களவை சீட்டை கோரிக்கையாக வைத்தார். ஆனால், அதிமுக அதைக் கொடுக்க முன்வந்தது. இருப்பினும், பாமகவுக்கான தொகுதி எண்ணிக்கையைக் குறைத்தது. இதனால், பாஜக கூட்டணிக்கு சென்றார் அன்புமணி.
ஆனால், பாஜக கூட்டணியில் உள்ள சிக்கல் என்னவெனில், பாமக வெல்லும் தொகுதி எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டுதான் பாஜக ராஜ்ய சபா சீட் வழங்க வேண்டுமா, கூடாதா என முடிவு செய்யுமாம். குறிப்பாக, பாஜக - பாமக தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் 50% தொகுதிகளை வென்று கொடுத்தால் மட்டுமே ராஜ்ய சபா சீட் வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால்தான் ஒப்பந்தத்தைப் பார்த்ததும் ராமதாஸும் ‘ஷாக்’ ஆனார் என்கிறார்கள்.
எனவே, எங்கே இந்த நிபந்தனையால் ராஜ்ய சபா சீட் கிடைக்காமல் போய்விடுமோ என்னும் குழப்பத்தில்தான் சவுமியாவைக் களமிறக்கினால் வெற்றி உறுதியாகும் என்ற நம்பிக்கையில், இந்த மாற்றம் நடந்துள்ளது என தகவல் சொல்லப்படுகிறது. தருமபுரியில் ‘பசுமைத் தாயகம்’ சவுமியா அன்புமணி வெற்றி வாகை சூடுவாரா என்பதற்கு ஜூன் 4-ல் விடை தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT