Published : 23 Mar 2024 01:20 PM
Last Updated : 23 Mar 2024 01:20 PM
சென்னை: 40 மக்களவை தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது அதிமுக. புதுச்சேரி உட்பட 33 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக தொடங்குகிறது. இந்நிலையில், இன்று 40 மக்களவை தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி, அதிமுக அலுவலகத்தில் இருந்து பணிகளை முறைப்படுத்தும் தேர்தல் பொறுப்பாளராக பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை தேர்தல் பொறுப்பாளராக எஸ்.பி.வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வடக்கு தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், சென்னை தெற்கு தேர்தல் பொறுப்பாளராக கோகுல இந்திரா, காஞ்சிபுரம் பொறுப்பாளராக பா.வளர்மதி, அரக்கோணம் பொறுப்பாளராக கே.சி.வீரமணி, வேலூர் பொறுப்பாளராக தம்பிதுரை, கிருஷ்ணகிரிக்கு கேபி முனுசாமி, தருமபுரிக்கு கே.பி.அன்பழகன், திருவண்ணாமலை மற்றும் ஆரணிக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் கே.சி.வீரமணி போன்றோர்களும், விழுப்புரம் தொகுதிக்கு சி.வி சண்முகமும், நாமக்கல் தொகுதிக்கு தங்கமணியும், ஈரோடு மற்றும் திருப்பூர் தொகுதிக்கு செங்கோட்டையனும், நீலகிரி, பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூருக்கு எஸ்பி வேலுமணியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், திண்டுக்கல் தொகுதிக்கு திண்டுக்கல் சீனிவாசன், தேனி மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளுக்கு ஆர்பி உதயகுமார் என்று ஒவ்வொரு தொகுதிகளுக்கும் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT