Published : 23 Mar 2024 11:12 AM
Last Updated : 23 Mar 2024 11:12 AM
விருதுநகர்: திரைப்பட நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியால் விருதுநகர் தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.
விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு எப்போதும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. கடந்த 1977-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்ஜிஆர். வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வர் ஆனார். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியும் ஒன்று. கர்மவீரர் காமராஜர் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதல்வர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது ஆட்சிக் காலம் பொற்கால ஆட்சிக் காலமாக இன்றும் எடுத்துக் கூறப்படுகிறது. இவ்விரு சட்டமன்றத் தொகுதிகளும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சாத்தூர் ராமச்சந்திரன் வருவாய்துறை அமைச்சராகவும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி தொகுதி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை என்றாலும், இத்தொகுதியில் வென்ற விருதுநகர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரான தங்கம் தென்னரசு நிதி அமைச்சராக பொறுப்பு வகித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
காமராஜர் பிறந்த ஊர் என்பதாலேயே காங்கிரஸ் இத்தொகுதியை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து போட்டியிட்டு பல முறை வெற்றிபெற்றுள்ளது. விருதுநகர் மக்களவைத் தொகுதியில் 1967-ல் ராமமூர்த்தி (எஸ்.டபிள்யூ.ஏ), 1971, 1977ல் ஜெயலட்சுமி (காங்கிரஸ்), 1980, 1984ல் சௌந்தர்ராஜன் (அதிமுக), 1989ல் காளிமுத்து (அதிமுக), 1991ல் கோவிந்தராஜுலு (அதிமுக), 1996ல் அழகிரிசாமி (சிபிஐ), 1998, 1999ல் வைகோ (மதிமுக), 2004ல் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் (மதிமுக), 2009ல் மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்), 2014ல் டி.ராதாகிருஷ்ணன் (அதிமுக), 2019ல் மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) ஆகியோர் வெற்றிபெற்றனர்.
தற்போது, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணிக்கம்தாகூர் எம்.பி.யே இம்முறையும் வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. அதோடு, விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக திரைப்பட நடிகை ராதிகாவும், அதிமுக கூட்டணியில் வேட்பாளராக திரைப்பட நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனும் போட்டியிடுவதால் இம்முறை விருதுநகர் மக்களவைத் தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT