Published : 23 Mar 2024 10:47 AM
Last Updated : 23 Mar 2024 10:47 AM

“இசையிலும் அரசியலைக் கலக்க வேண்டாம்” - டி.எம்.கிருஷ்ணா விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கருத்து

சென்னை: “டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சென்னை மியூசிக் அகாடமி சார்பில் 2024-ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இசைக் கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள், ஆன்மிக உபன்யாசகர் துஷ்யந்த் ஸ்ரீதர், பின்னணி பாடகி சின்மயி உள்ளிட்டோர் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “சிறந்த பாடகர் டி.எம்.கிருஷ்ணா சென்னை மியூசிக் அகாடமி சார்பில் 2024-ம் ஆண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.

டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை!” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x