Published : 23 Mar 2024 06:25 AM
Last Updated : 23 Mar 2024 06:25 AM
சென்னை: ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம், விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் மாத ஓய்வூதியம், 100 நாள் வேலை திட்ட கூலி ரூ.450-ஆக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பன உள்ளிட்ட 133 வாக்குறுதிகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், சி.பொன்னையன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்தனர்.
தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பொதுச் செயலாளர் பழனிசாமி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம், விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் மாத ஓய்வூதியம் வழங்
கப்படும்.
100 நாள் வேலை திட்டத்தில் தினமும் ரூ.450 ஊதியம், ரயில் பயணத்தில் முதியோருக்கு 50 சதவீத கட்டணச் சலுகை,
விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் மானியம் ரூ.12 ஆயிரமாக உயர்வு, நெல் குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.6 ஆயிரம் நிர்ணயம் செய்தல் உள்ளிட்டவற்றை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.
அதேபோல, ஆளுநர்களை நியமிக்கும்போது, முதல்வரின் ஒப்புதலுடன் நியமிக்குமாறும் மத்திய அரசை வலியுறுத்துவோம். தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், வருங்கால வைப்புநிதி ஓய்வூதியர்களுக்கு பஞ்சப்படியுடன் கூடிய ஓய்வூதியும் வழங்கவும், மக்களவை குளிர்காலக் கூட்டத்தொடரை சென்னையில் நடத்தவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெறவும், காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்கவும் வலியுறுத்துவோம்.
காவிரி - குண்டாறு- வைகை மற்றும் கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மருத்துவ மாணவர் தேர்வை, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க தென் பிராந்தியத்தில் கடற்படை பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும். குடும்ப அட்டைக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்களை இலவசமாக வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்களுக்கு பதிலாக மத்திய அரசே நிர்ணயித்து அவற்றின் விலையை குறைக்க வேண்டும்.
தமிழகத்தில் பிற நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை கொண்டுவர வேண்டும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்துவோம். மேலும், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தவும், 40 புதிய வழித்தடங்களில் ரயில்களை இயக்கவும், திருச்சி- ராமேசுவரம் உள்ளிட்ட 11 வழித்தடங்களை 4 வழிச்சாலையாக மாற்றவும் வலியுறுத்துவோம்.
கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும், கல்விக் கடனை மத்திய அரசே முழுமையாக ஏற்கவும், மக்கள் உயிர் காக்கும் அனைத்து மருந்துகளுக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்குமாறும்,புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவும் வலியுறுத்துவோம் என்றார்.
25ல் வேட்புமனு தாக்கல்: தேர்தல் அறிக்கையில் திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்கள்போல, 133 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். தேர்தல் அறிக்கையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து பழனிசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் ஆசி பெற்றனர். அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வரும் 25-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT