Published : 23 Mar 2024 09:50 AM
Last Updated : 23 Mar 2024 09:50 AM
தஞ்சாவூர்: மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை தஞ்சையில் நடைப்பயிற்சியின் போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் முதல்வருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் வெள்ளிக்கிழமை பிரச்சாரத்தை தொடங்கினார். திருச்சி அருகே சிறுகனூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் திருச்சி வேட்பாளர் துரை வைகோ, பெரம்பலூர் வேட்பாளர் அருண் நேருவை அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து, தஞ்சாவூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி,நாகப்பட்டினம் வேட்பாளர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த செல்வராஜ் ஆகிய இருவருக்கும் வாக்கு கேட்டு கேட்டு,இன்று (சனிக்கிழமை) மாலை திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
இதற்காக நேற்று இரவு தஞ்சாவூர் வந்த ஸ்டாலின் தனியார் தங்கும் விடுதியில் ஓய்வெடுத்தார் தொடர்ந்து,இன்று காலை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில்,வேட்பாளர் முரசொலியுடன் நடை பயிற்சி சென்ற முதல்வர் ஸ்டாலின் குழந்தைகளுடன் செல்பி , வாலிபால் விளையாட்டு என சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக வாக்கிங் வந்தவர்களிடமும் பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்தார்.பின்னர் அங்கிருந்து காமராஜ் மார்க்கெட்டுக்கு இன்று வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் வாக்கு கேட்டு விட்டு,கீழ ராஜ வீதியில் உள்ள டீக்கடை ஒன்றில் கட்சியினருடன் டீ குடித்தார்.
விவசாய சங்கங்கள் ஆதரவு: பின்னர் தங்கும் விடுதிக்கு வந்த பிறகு 16 விவசாய அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் , முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, எம் எஸ் சுவாமிநாதன் பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்த வலியுறுத்த வேண்டும், தமிழக நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT