Published : 23 Mar 2024 09:22 AM
Last Updated : 23 Mar 2024 09:22 AM

“திமுக அணியை பலப்படுத்துவதே என் நோக்கம்” - கமல்ஹாசன் நேர்காணல்

‘தி இந்து’ தலைமை அலுவலகத்துக்கு வந்த நடிகர் கமல்ஹாசன்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வருகை தந்து நாளிதழின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களிடம் உரையாடினார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம்:

முதலில் நீங்கள் கட்சி ஆரம்பித்த காரணத்தை சொல்ல முடியுமா? - நாங்கள் நற்பணி இயக்கமாகவே முதலில் செயல்பட்டோம். மக்களுக்கு நல்லது செய்ய எடுத்த முயற்சிகள் எல்லாமே இறுதியில் அரசியல்வாதிகளின் மேஜைகளில் போய் நின்றது. நானும் மற்ற நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப்போல் அரசியலை வெறுத்தவன்தான்.

அது ஒரு பாவச்செயல் என்று நினைக்கிறேன். நாமெல்லாம் அரசியலை சாக்கடை என்று மட்டுமே நினைக்கிறோம். அதில் தியாகம், நல்ல நோக்கமும் உண்டு. எனவே, நல்ல முயற்சிகளை எடுக்க அரசியல்தான் தீர்வு என்பதை உணர்ந்து அரசியலில் நானும் நுழைந்தேன்.

முதலில் திமுகவை கடுமையாக எதிர்த்த நீங்கள் திடீரென திமுக அணிக்கு ஆதரவு தெரிவிக்க காரணம் என்ன? - என்னை விமர்சிப்பவர்களுக்கு நான் பிறகு பதில் சொல்கிறேன். இப்போது அதற்கான நேரமல்ல. சுதந்திரத்துக்கு முன்பு கூட இதுபோல நடந்திருக்கிறது. பல்வேறு மாற்றுக் கருத்து கொண்டவர்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஒன்று சேர்ந்துள்ளனர்.

நான் பெரியாரை ஆதரிப்பவன். காந்தியை ஆதரிப்பவன். இருவரது கொள்கைகளையும் ஆழமாக பார்த்தால் ஒரே நோக்கம் இருப்பதை உணர முடியும். ராமானுஜரின் கொள்கையிலும் அதைப் பார்க்க முடியும்.

நாட்டில் ஒரு சக்தி, மக்களை பிளவுபடுத்த நினைக்கும்போது அதற்கு எதிராக நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது நாட்டில் மனிதர்கள் மத்தியில் மதத்தின் அடிப்படையில் கடப்பாரையை வைத்து குத்தி பிளவு ஏற்படுத்துகின்றனர். இதற்கு எதிராக நிற்க வேண்டும் என்ற எனது நிலைப்பாடே என்னை திமுக பக்கம் அணி சேரச் செய்தது.

திமுக கூட்டணியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டீர்களா? - இல்லை. நான் நினைத்திருந்தால் 3 அல்லது 4 இடங்கள் கேட்டு நெருக்கடி கொடுத்திருக்க முடியும். ஆனால், அதற்கான நேரம் இதுவல்ல. நாட்டின் எதிர்கால அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க கூடிய முக்கியமான தேர்தல் இது என்பதால், அந்த அணியை பலப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கமாக இருந்தது.

பாஜகவுக்கு சாதகமாக கணிப்புகள் வருகிறதே? - நான் ஒருபோதும் கணிப்புகளை ஏற்பதில்லை. என் திரைப்படங்களின் வெற்றி பற்றியும் நான் கணிப்பதில்லை. வாக்காளர்களை சாதாரணமாக நினைத்துவிட முடியாது. அவர்கள் படிக்காதவர்களாக கூட இருக்கலாம். ஆனால், அவர்கள் ஒரே குரலில் பேசுவார்கள். நாட்டின் சூழ்நிலை அவர்களுக்குப் புரியும். அதனால்தான் நாம் இன்னும் ஒரே நாடாக இருக்கிறோம்.

மத்திய – மாநில உறவு பாதிக்கும் வகையில் சில மாநில ஆளுநர்கள் வரம்பு மீறி செயல்படுவதாக நினைக்கிறீர்களா? - ஆளுநர்கள் மத்திய அரசின் கொள்கை பரப்பு செயலாளர்கள்போல செயல்படுகிறார்கள். மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக செயல்படுகிறார்கள். திராவிடத்தை அழிப்போம் என்கிறார்கள். தேசிய கீதம் இருக்கும் வரை திராவிடம் இருக்கும்.

பாஜக மட்டுமே இந்தியாவை வளர்ச்சிக்கு கொண்டு செல்ல தகுதி வாய்ந்த கட்சி என்ற பிரச்சாரம் பற்றி உங்கள் கருத்து? - ஒரே நாடு; ஒரே தேர்தல்; ஒரே கட்சி என்பது போன்ற வாதங்களை நான் ஏற்கவில்லை. இந்தியா பன்முகத்தன்மை வாய்ந்த நாடு. ஒரு தரப்பின் கருத்தை இன்னொரு தரப்பின் மீது திணிக்கக் கூடாது. மக்கள் நீதி மய்யம் உருவாக்கப்பட்டதன் நோக்கமும் அதுவே.

‘இண்டியா’ கூட்டணியின் தலைவராக ராகுல் இருப்பது பற்றி உங்கள் கருத்து? - தனி நபரின் பிம்பத்தை தாண்டி நாம் பார்க்க வேண்டிய சூழல் தற்போது உள்ளது. இப்போதைய அச்சுறுத்தும் சூழலை முறியடிக்க, ஓர் அணிக்கு தலைமை தாங்க அடையாளமாக ஒருவர் தேவை. அந்த அடையாள தலைவர் இப்போதைக்கு ராகுல்காந்தி. இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x