Published : 23 Mar 2024 09:46 AM
Last Updated : 23 Mar 2024 09:46 AM
சென்னை: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், நேற்று ஒரே நாளில் 39 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையும் சேர்த்து இதுவரை 69 வேட்புமனுக்கள் வரப்பெற்றுள்ளன.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. துணை ராணுப்படை, செலவின பார்வையாளர்கள் உட்பட தேர்தல் பார்வையாளர்கள் அடுத்தடுத்து தமிழகம் வந்த வண்ண் உள்ளனர்.
இதன்தொடர்ச்சியாக தமிழகத்தில் தேர்தல் பணிக்காக பொது பார்வையாளர்களாக 39 பேரையும் காவல் துறை பார்வையாளர்களாக 20 பேரையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கும் சிவிஜில் செயலிமூலம் 864 புகார்கள் பதிவாகியுள்ளன. பொது மற்றும் அரசு இடங்களில் உள்ள சுவர்களில் உள்ள 2 லட்சத்து 97,083 தேர்தல் விளம்பரங்கள், தனியார் இடங்களில் 96,541 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. தனியார் கட்டிடங்களில் விளம்பரம் தொடர்பாக 16 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
கட்சிகளின் நட்சத்திரப் பேச்சாளர்கள் 159 பேருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு தேர்தல் பார்வையாளர்களாக தொகுதிக்கு ஒருவர் என 39 பொது பார்வையாளர்கள், இரு தொகுதிக்கு ஒருவர் என 20 காவல் துறை தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வேட்பு மனுத்தாக்கல் நிறைவு நாளுக்கு முன்வருவார்கள். நாளை (மார்ச் 23)அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்கள் இடம்பெறும்.
தேர்தலை அமைதியாக நடத்துவது, தேர்தல் விதிமீறல்களை தவிர்ப்பது, வாக்குகளுக்கு பணப் பட்டுவாடா செய்வதை தடுப்பது, வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. நேற்றும் வேட்புமனு தாக்கல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. இதன்படி நேற்று ஒரே நாளில் 39 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 3 நாட்களில் ஆண்கள் 67 மனுக்களும் பெண்கள் 2 மனுக்களும் என மொத்தம் 69 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் பொது விடுமுறை இன்றும் நாளையும் மனுதாக்கல் செய்ய முடியாது. மாதத்தின் 2-வது சனிக்கிழமை என்பதால் இன்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை என்பாதலும் இந்த 2 நாட்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இயலாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT