Published : 23 Mar 2024 06:20 AM
Last Updated : 23 Mar 2024 06:20 AM
சென்னை: கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சென்னை மியூசிக் அகாடமி சார்பில் 2024-ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இசைக் கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள், ஆன்மிக உபன்யாசகர் துஷ்யந்த் ஸ்ரீதர், பின்னணி பாடகி சின்மயி உள்ளிட்டோர் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். எதிர்ப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் சென்னை மியூசிக் அகாடமி சார்பில் அதன் தலைவர் என்.முரளி விளக்கம் அளித்துள்ளார்.
பல்வேறு கலைஞர்கள் தெரிவித்துள்ள கருத்துகள்:
கர்னாடக இசைக் கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள்: சென்னை மியூசிக் அகாடமியின் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாநாட்டில் பங்கேற்பதில் இருந்தும், டிசம்பர் 25-ம் தேதி எங்கள் கச்சேரியை வழங்குவதிலிருந்தும் விலகுவதற்கான எங்கள் முடிவை சென்னை மியூசிக் அகாடமி நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளோம்.
இந்த மாநாடு டி.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறவுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். அவர் கர்னாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர், வேண்டுமென்றே இந்த சமூகத்தின் உணர்வுகளை மிதித்து, சத்குரு தியாகராஜர், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய இசை விற்பன்னர்களை அவமதித்துள்ளார்.
இசையில் இருக்கும் ஆன்மிக உணர்வை அவர் தொடர்ந்து இழிவுபடுத்தியுள்ளார். பெரியார் போன்ற ஒருவரை அவர் புகழ்ந்து பேசியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் அப்படி பேசியிருப்பது மிகவும் ஆபத்தானது.
சாதி குறித்து வெளிப்படையாக முன்மொழிந்தது, இந்தச் சமூகத்தின் ஒவ்வொரு பெண்ணையும் தகாத வார்த்தைகளால் பேசியது, சமூகச் சொற்பொழிவில் இழிமொழியை இயல்பாக்க இடைவிடாமல் பாடுபட்டது ஆகியவற்றை மன்னிக்கவே முடியாது.
கலை மற்றும் கலைஞர்கள், வாக்கேயக்காரர்கள் ஆகியோரை மதிக்கும் நம் கலாச்சாரத்தை போற்றுகிறோம். இவற்றை புதைத்துவிட்டு இந்த ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ள எங்களுக்கு விருப்பம் இல்லை. எனவே நாங்கள் இந்த ஆண்டு அகாடமியின்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆன்மிக உபன்யாசகர் துஷ்யந்த் ஸ்ரீதர் கூறியதாவது: என்னைப் பொறுத்தவரை, மியூசிக் அகாடமி என்பது எம்பார் விஜயராகவாச்சாரியார், டி.எஸ் பாலகிருஷ்ண சாஸ்திரிகள், கமலா மூர்த்தி, கல்யாணபுரம் ஆராவமுதாச்சாரியார் போன்ற ஹரிகதா விற்பன்னர்கள் நிகழ்ச்சிகள் நடத்திய புனிதமான இடம் ஆகும். இந்த மேடை எனக்கு கோயில் போன்றது. இங்கு நிகழ்ச்சிகள் நடத்துவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.
2024-ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதுக்கு டி.எம்.கிருஷ்ணா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து கேள்வி கேட்க எனக்கு அதிகாரம் இல்லை. அவருடன் எனக்கு கருத்தியல் வேறுபாடு இருந்தது. தர்மம், அயோத்தி மற்றும் ராமன் பற்றிய அவரது பல பொது அறிக்கைகளால் நான் வேதனைப்படுகிறேன்.
பகவத் ராமானுஜர், வேதாந்த தேசிகர், காஞ்சி பரமாச்சாரியரின் வாழ்க்கை மற்றும் போதனைகளால் நான் வழிநடத்தப்படுகிறேன். 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது அளிக்கப்பட்டவுடன், என்னுடைய நிகழ்ச்சியை வழங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அன்று நிகழ்ச்சி நடத்துவதில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன்.
இனி வரும் காலங்களில் மியூசிக் அகாடமி இன்னும் நல்ல உயரத்துக்கு உயர வேண்டும் என்று எப்போதும் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு கூறினார்.
பின்னணி பாடகி சின்மயி: 2018-ம் ஆண்டில் பல கர்னாடக இசைக் கலைஞர்கள் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் குறித்த புகார்களுக்கு பெரிய அளவில் தங்கள் கருத்துகளை பதிவிடவில்லை. தற்போது டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டதற்கு பலமான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கான காரணம் சரிவர புரியவில்லை. டி.எம்.கிருஷ்ணாவுக்கு என் வாழ்த்துகள் என்றார்.
ரஞ்சனி மற்றும் காயத்ரி எழுதிய கடிதத்துக்கு, சென்னை மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி அளித்த விளக்கம்: டி.எம்.கிருஷ்ணா இசையில் சிறந்து விளங்கியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட புறம்பான காரணிகள் அவரது தேர்வை பாதிக்கவில்லை.
வரவிருக்கும் மாநாட்டில் ரஞ்சனி காயத்ரி இருவரும் பங்கேற்கப் போவதில்லை என்ற முடிவு துரதிர்ஷ்டவசமானது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர்கள் விரும்பாத ஓர் இசைக் கலைஞரைக் குறித்து அவர்கள் அவதூறாகப் பேசியிருப்பது மிகவும் தவறு.
எனக்கும், மியூசிக் அகாடமிக்கும் எழுதிய கடிதத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது மிகவும் தவறு. உங்கள் கடிதத்தின் பொருளும் அதன் நோக்கமும் மிகவும் கவலை கொள்ளச் செய்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, எதிர்ப்புகளும் அவருக்கு ஆதரவான கருத்துமாக விவாதங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. விரைவில் இந்த சர்ச்சை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT