Published : 22 Mar 2024 07:01 PM
Last Updated : 22 Mar 2024 07:01 PM

தமிழக மீனவர்களை மீட்கக் கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை செய்திடவும் வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மார்ச் 21 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும், அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (மார்ச் 22) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும், நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 21-ம் தேதியன்று தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது 5 விசைப்படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிட வேண்டும்.

எனவே, இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இலங்கைச் சிறைகளில் வாடும் மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை உறுதி செய்திட வேண்டும் என்று முதல்வர் அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x