Published : 22 Mar 2024 08:22 PM
Last Updated : 22 Mar 2024 08:22 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்படும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தேர்தல் திருவிழா அழைப்பிதழ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் சின்னத்துடன் தேர்தல் திருவிழா, தேசத்தின் பெருவிழா என்ற முகப்பு வாசகங்களுடன் அச்சிடப்பட்டுள்ள இந்த அழைப்பிதழில் இடம்பெற்ற வாசகங்கள் விவரம்: 'திருநெல்வேலி மக்களவை தொகுதி தேர்தல் திருவிழா அழைப்பிதழ். அன்புடையீர் வணக்கம். நிகழும் மங்களகரமான திருவள்ளுவராண்டு 2055 சித்திரை 6-ம் நாள் 19.4.2024 வெள்ளிக்கிழமை நலம்தரும் நன்னாளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் பாராளுமன்ற மக்களவை தேர்தல் திருவிழா, தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச் சாவடியில் நடைபெறுகிறது.
இவ்விழாவில் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்து, நமது மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு நடத்தி தங்கள் உரிமையை நிலைநாட்டிட அன்புடன் அழைக்கிறோம்.' இவ்வாறு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
அழைப்பிதழின் கீழே தங்கள் அன்புள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் பெயரும், அந்தந்த சட்டப் பேரவை தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பெயரும் அச்சிடப்பட்டுள்ளது.
மேலும் வாக்குச்சாவடியை அறிய கியூஆர் கோடு முத்திரையும், தகவல்கள் புகார்களுக்கான 1950, 18004258373 ஆகிய தொலைபேசி எண்களும் உள்ளன. உரிமையை நிலைநாட்ட அன்பளிப்பு அளிப்பதும் பெறுவதும் பெரும் குற்றமாகும். எனவே அன்பளிப்பை தவிர்ப்பீர் என்ற வாசகங்களும் முத்தாய்ப்பாக இடம்பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT