Published : 22 Mar 2024 04:46 PM
Last Updated : 22 Mar 2024 04:46 PM
புதுச்சேரி: “தேர்தல் சமயத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது என்பது ஜனநாயகத்தை மிகப் பெரிய கேள்விக்குறியாக்கி இருக்கிறது” என புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
புதுச்சேரி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி போட்டியிடுகிறார். இந்நிலையில், புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி வங்கிக் கணக்குகள் முடக்கம், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது ஆகிய சம்பவங்களுக்கு மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் எம்.பி, “காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டை முடக்க வேண்டும். கட்சியை செயல்படுத்த விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு தேர்தல் பத்திரத்தின் மூலமாக பாஜக ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு வசூல் செய்து, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி இருக்கிறது.
12 கோடி வாக்காளர்களின் வலுவினை பெற்ற காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் செய்திருப்பது வேதனை தரக்கூடிய நிகழ்வு. ஜனநாயகத்தை முடக்கக் கூடிய காட்சி. பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் இருவரும் நாட்டின் சர்வாதிகார எல்லைக்கே சென்று கொண்டிருக்கின்றனர். இது வேதனை தரும் நிகழ்வாக இருக்கின்றது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஆகவே, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கத்தை உடனடியாக விலக்க வேண்டும்.
இதேபோல், டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாஜகவின் இத்தகைய செயல்பாடு ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே, உடனே டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை விடுதலை செய்து தேர்தல் பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும்.
மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய ஒரு ஆட்சியைத் தருவோம். அதுமட்டுமின்றி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இல்லாத ஒரு நிலையை உருவாக்குவோம் என்ற வாக்குறுதிகளை மக்களவை தேர்தலில் நாங்கள் கொடுப்போம்.
மக்களவை தேர்தலில் புதுச்சேரியைச் சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏக்கள் ஒப்புக்கொண்டால் அவர்களிடமும் ஆதரவு கேட்போம். பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தான் வேட்பாளர் என்பதை நாங்கள் மனதில் வைத்துத்தான் தேர்தல் பணிகளை செய்து வருகின்றோம். ஆகவே, இது எங்களுக்கு புதிதல்ல. மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் எந்த நிலைப்பாடாக இருந்தாலும் அதற்கு உறுதுணையாக புதுச்சேரி காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக இருக்கும்” என்றார்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறும்போது, “மோடி அரசு திட்டமிட்டு, தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருமான வரித் துறை மூலம் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கியிருப்பதை இண்டியாக கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது. எதிர்கட்சிகளின் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்பதற்காக பாஜக அரசு அதிகாரிகள் மூலம் தேர்தல் சமயத்தில் நடைமுறைப்படுத்துகிறார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் சமயத்தில் டெல்லி, பஞ்சாப் சென்று பிரச்சாரம் செய்தால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்பதால் அவரை கைது செய்திருக்கிறது. இது ஜனநாயகத்தை மிகப் பெரிய கேள்விக் குறியாக்கி இருக்கிறது.
தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கான உரிமையை வழங்க வேண்டும். அதனை முடக்கும் வேலையை மோடி அரசு செய்து வருகிறது. ஆகவே, இந்த மோடி அரசின் அதிகார துஷ்பிரயோகம், எதிர்கட்சிகளை முடக்க வேண்டும் என்ற சதித் திட்டத்தை எதிர்த்து இண்டியா கூட்டணி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி, அதனை வன்மையாக கண்டிக்கிறது" என்று அவர் கூறினார்.
இந்நிகழ்வில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா, அவை தலைவர் எஸ்.பி.சிவக்குமார், திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், காங்கிரஸ் எம்எல்ஏ வைத்திய நாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, சிபிஐ மாநில செயலாளர் சலீம், சிபிஎம் மாநில செயலாளர் ராஜாங்கம், விசிக முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மதிமுக கபிரியேல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT