Published : 22 Mar 2024 03:05 PM
Last Updated : 22 Mar 2024 03:05 PM
புதுச்சேரி: புதுச்சேரி பாஜக வேட்பாளராக நமச்சிவாயம் அறிவிக்கப்பட்டதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியில் நிலவி வந்த நீண்ட இழுபறி முடிவுக்கு வந்தது.
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராகவும், முதல்வராகவும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உள்ளார். கடந்த பிப்ரவரி 7-ம் தேதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழா நடந்தது. விழாவில் பேசும்போது, "புதுவை நாடாளுமன்றத் தொகுதியில் கூட்டணி கட்சியான பாஜக போட்டியிடும்" என ரங்கசாமி அறிவித்தார்.
ஒன்றரை மாதங்களை கடந்தும் வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் பாஜக திணறி வந்தது. அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால்தான் வெற்றி பெற முடியும் என்று புதுவை பாஜக நிர்வாகிகள் கட்சித் தலைமையிடம் அறிவுறுத்தினர். ஆனால் அமைச்சர் நமச்சிவாயம் தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்தார். உள்ளூர் அரசியலில் தொடர விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
இதனால், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநராக இருந்த தமிழிசை, பாஜக எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், சிவசங்கரன், காரைக்கால் தொழிலதிபர் ஜிஎன்எஸ்.ராஜசேகரன், பாஜக மாநில தலைவர் செல்வகணபதி எம்பி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது.
இவர்களை முதல்வர் ரங்கசாமி வேட்பாளராக ஏற்கவில்லை. அதோடு முதல்வர் ரங்கசாமியும், அமைச்சர் நமச்சிவாயத்தை வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி வந்தார். இதனால் வேட்பாளர் தேர்வு நீண்ட இழுபறியானது. வேட்பாளர் தேர்வு செய்ய முடியாமலும், வேட்பாளர் இல்லாமலும் பாஜக தவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத்தொடங்கின.
இதனால் தேர்தல் பணியை ஓராண்டுக்கு முன்பே தொடங்கிய பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே சோர்வு ஏற்பட்டது. இந்த நிலைமையை கட்சியின் மேலிடத்துக்கு புதுவை மாநில பாஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா எடுத்துக்கூறினார். 'தற்போதைய சூழலில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுவதுதான் கட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் அமையும்' என கட்சித் தலைமைக்கு அவர் எடுத்துக்கூறினார்.
இதையடுத்து, மத்திய அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் நமச்சிவாயத்தை தொடர்பு கொண்டு பேசி தேர்தலில் போட்டியிட அறிவுறுத்தினார். அத்துடன் புதுச்சேரிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் உரிய பதவி தருவதாகவும் நமச்சிவாயத்திடம் உறுதித் தந்தார். இதன்பின்னரே அமைச்சர் நமச்சிவாயம், இன்று காலை முதல் தனது ஆதரவாளர்களை தொடர்புகொண்டு தேர்தல் பணிக்கு தயாராக அறிவுறுத்தினார். ஒவ்வொருவரையும் தனித்தனியே போனில் அழைத்து பேசி வந்தார்.
அதைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) புதுச்சேரி பாஜக வேட்பாளராக நமச்சிவாயம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் ஒரு வழியாக நீண்ட இழுபறி பாஜனதாவில் முடிவுக்கு வந்துள்ளது.
முதல் முறையாக போட்டி - 55 வயதான நமச்சிவாயம் முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். டிசிஇ படித்துளார். இவரது மனைவி பெயர் வசந்தி. சிவஹரிஷ் என்கிற மகன் உள்ளார். முதல்வர் ரங்கசாமியின் அண்ணன் மகளை மணந்துள்ளதால் அவருக்கு மருமகன் முறை வருவார் நமச்சிவாயம். திமுக, மதிமுக, தமாகா, காங்கிரஸ் கட்சிகளில் இருந்துள்ளார்.
புதுச்சேரியின் 11-வது சட்டப்பேரவையில் 6.6.2002ல் வேளாண் அமைச்சராக இருந்தார். 12வது சட்டப்பேரவையில் முதல்வரின் நாடாளுமன்ற செயலாளராக இருந்தார். 2008 முதல் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். கடந்த 2016ல் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியமைக்க காரணமாக இருந்தார். முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வரானார்.
அதில் இருந்து அதிருப்தியில் இருந்தார். எனினும், அப்போது காங்கிரஸ் மாநிலத் தலைவராகவும், 14 வது சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் தொடர்ந்தார். 2021ல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். தற்போது 15வது சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT