Published : 22 Mar 2024 02:07 PM
Last Updated : 22 Mar 2024 02:07 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிடவுள்ள காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பதை கட்சி தலைமை அறிவிக்கும் முன்னரே கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. இது தொடர்பாக கட்சி பிரமுகர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
திமுக கூட்டணியில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குப்பின் இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி நேரடியாக போட்டியிடுவது அக் கட்சியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தொகுதியில் போட்டியிடுவதற்கு நாங்கு நேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேரடியாகவே விருப்பமனுவை கட்சி நிர்வாகிகளிடம் அளித்திருக்கிறார்.
அதே நேரத்தில் இத்தொகுதியில் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் போட்டியிட விருப்பம் தெரிவித்து, மாவட்ட நிர்வாகிகள் பலரும் விருப்ப மனுவை அளித்திருக்கிறார்கள். இதுபோல் மேலும் பல நிர்வாகிகளும் மனு அளித்துவிட்டு காத்திருக்கிறார்கள்.
கட்சியின் அதிகாரப் பூர்வ வேட்பாளர் யார் என்றே இன்னும் தெரியாத நிலையில், ‘வேடந்தாங்கல் பறவைகளுக்கு இடமில்லை’ என்ற தலைப்பிட்டு, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த பிரமுகர் குட்டம் சிவாஜி முத்துக்குமார் என்பவர் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். ‘பீட்டர் அல்போன்ஸுக்கு சீட் அளிக்க கூடாது.
மண்ணின் மைந்தர்களுக்கே வாய்ப்பு அளிக்க வேண்டும். இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். பீட்டர் அல்போன்ஸுக்கு சீட் கொடுத்தால் தமிழகத்தில் 39 தொகுதிகளில் ஒன்றை திமுக கூட்டணி இழக்கும்’ என்று பல்வேறு கருத்து களையும் அதில் பதிவிட்டுள்ளார். இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வேட்பாளர் யார் என்பதே தெரியாத நிலையில் கோஷ்டி பூசல் இப்போதே வெளிப்பட்டுள்ளது காங்கிரஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT