Published : 22 Mar 2024 12:46 PM
Last Updated : 22 Mar 2024 12:46 PM

இருமுறை முதல்வர், 7 முறை எம்எல்ஏ, ஒருமுறை எம்.பி... - புதுச்சேரியில் மீண்டும் களம் காணும் வைத்திலிங்கம்!

வைத்திலிங்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் இரு முறை முதல்வர், 7 முறை எம்எல்ஏ பதவி மற்றும் ஒரு முறை எம்.பியாக தேர்வான வைத்திலிங்கம், தற்போது மீண்டும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

புதுச்சேரியை அடுத்த நெட்டப்பாக்கம் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் அக்டோபர் 5, 1950-ல் பிறந்தவர் வைத்திலிங்கம். இவர், புதுச்சேரியின் இரண்டாவது முதல்வராக பொறுப்பேற்ற வெங்கடசுப்பா ரெட்டியாரின் மகனாவார். சென்னை லயோலா கல்லூரியில் பயின்று, பின்னர் தமது குடும்ப விவசாய பணிக்கு திரும்பினார். 1969 -ம் ஆண்டு சசிகலா என்பவரை மணம் புரிந்தார்.

இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்த வைத்திலிங்கம், 1971- ல் இருந்து காங்கிரஸ் கட்சியில் தன்னை ஈடுபடுத்தி வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனார்.

புதுச்சேரி மாநில கூட்டுறவு நிலவள வங்கித் தலைவர், புதுச்சேரி ஒழுங்கு முறை விற்பனை கூடத் தலைவர், மாநில விவசாயிகள் சங்க துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்று செயல்பட்டவர். 1980-ம் ஆண்டு முதன் முதலில் நெட்டப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்விடையந்தார்.

1985-ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வைத்திலிங்கம், அப்போதைய பாரூக் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் பொதுப் பணித்துறை அமைச்சராக பணியாற்றினார்.

தொடர்ந்து 1991-ம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1996 வரை புதுச்சேரி முதல்வராக பதவி வகித்தார். 1996 -ம் ஆண்டு தேர்தலிலும் நெட்டப் பாக்கம் தொகுதியிலிருந்து தேர்தெடுக்கப்பட்டு 2000 வரை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார்.

2001-ம் ஆண்டு தேர்தலிலும் நெட்டப்பாக்கம் தொகுதியில் இருந்து தேர்வான வைத்திலிங்கம், 2006-ம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டு, ரங்கசாமி அமைச்சரவையில் தொழில் மற்றும் மின் துறை அமைச்சராக பணியாற்றினார்.

இதே அமைச்சரவையில் முதல்வராக இருந்த ரங்கசாமி நீக்கப்பட்டு, 2008-ம் ஆண்டு மீண்டும் முதல்வரான வைத்திலிங்கம் 2011 வரை இரண்டரை ஆண்டுகள் பணியாற்றினார். 5 முறை கிராமப்பகுதியான நெட்டப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று வந்த வைத்திலிங்கம், தொகுதி மறு சீரமைப்பு காரணமாக 2011-ல் புதுச்சேரி நகரில் உள்ள காமராஜர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவராக பொறுப்பு வகித்தார்.

2016-ல் மீண்டும் காமராஜர் நகர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட வைத்திலிங்கம் சட்டப்பேரவைத் தலைவராக பணியாற்றினார். பின்னர் இப்பதவியை ராஜினாமா செய்து விட்டு, கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். கடந்த 2023-ல் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

நடப்பு மக்களவையில், 150-க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி, 60-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் பெற்றார். பூஜ்ய நேரத்தில் நாடாளுமன்றத்தில் 15 முறை கேள்விகளை எழுப்பினார். தற்போது மீண்டும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட உள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2023-ல் புதுச்சேரி காங்., தலைவராக வும் நியமிக்கப் பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x